ஆருஷி விவகாரம்-மீண்டும் பழைய அதிகாரி நியமனம்!
டெல்லி: ஆருஷி கொலை விவகாரத்தை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு ஆதிகாரி இரு வாரங்களுக்கு முன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் வழக்கு மேலும் தாமதமாகும் என புகார் எழுந்ததை அடுத்து, தற்போது சிறப்பு குழுவிற்கு அந்த அதிகாரியேயே தலைமை ஏற்குமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
டெல்லி அருகே நொய்டாவில் 14 வயது சிறுமி ஆருஷியும், அவரது வீட்டு வேலையாளான ஹேமராஜும் கடந்த 2008ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
பல் மருத்துவரான ஆருஷியின் தந்தைக்கு கள்ளக்காதல் இருந்ததாகவும், அதை கண்டித்த மகளையும், வேலையாளையும் தந்தையே கொன்றுவிட்டார் என்றும் செய்திகள் வெளியாயின.
ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு வந்ததும் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
ராஜேஷ் தல்வாரின் கம்பவுன்டரான கிருஷ்ணாவுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சிபிஐ கூறியது.
ராஜ்குமார், விஜய் மண்டல் மற்றும் கிருஷ்ணா ஆகிய 3 பேரும் ஆரூஷியை கற்பழித்து கொன்றதாகவும், விஷயம் வெளியாகாமல் இருக்க வேலையாள் ஹேம்ராஜையும் சேர்த்து கொலை செய்ததாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கடந்த 2008ம் ஆண்டில் இந்த முடிவுக்கு வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து ராஜேஷ் தல்வாரும் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கை விசாரித்து வந்த குமார் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதன்பிறகு 2009 செப்டம்பர் முதல் டிஎஸ்பி ஏ.ஜி.கவுல் இவ்வழக்கை தலைமை ஏற்று விசாரித்து வந்தார்.
ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியதில் அவர்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமே இருந்திருக்கிறார்கள் என்று ஏ.ஜி.கவுல் கூறினார்.
நிஜமாக நடந்தது என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆருஷியின் பெற்றோருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியாக வேண்டும் என்று ஏ.ஜி.கவுல் சிபிஐ நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இரண்டாண்டுகளாக நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில் இதுவரை உண்மை நிலவரம் வெளிவராமலேயே இருந்துவருகிறது.
இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி ஏ.ஜி.கவுல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திடீரென ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
வழக்கு முன்னேற்றமான திசையில் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அதிகாரி ஏ.ஜி.கவுல் பணியிட மாற்றம் செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டிஎஸ்பி ஏ.ஜி.கவுல் மீண்டும் அதே சிறப்பு புலனாய்வு குழு தலைமை பொறுப்புக்கு மாற்றப்பட்டுவிட்டார்.
ஆருஷி வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்ற காரணத்தினால் ஏ.ஜி.கவுல் மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு அழைத்துவரப்பட்டார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications