பாகிஸ்தானில் தொடர்ச்சியாக தற்கொலைப்படை தாக்குதல் - 67 பேர் பலி
லாகூர்: லாகூரில் நேற்று அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் பலியான நிலையில், இன்று காலை ஸ்வாத் மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
லாகூரில் உள்ள பரபரப்பான மார்க்கெட் பகுதியில் நேற்று பகல் நேரத்தில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு ரோந்துப் படையினர் 18 பேருடன் அப்பாவி மக்களும சேர்த்து 57 பேர் பலியானார்கள்.
136க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மார்க்கெட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரை குறிவைத்து இந்த தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது.
சில நிமிடங்கள் இடைவெளி விட்டு இரண்டு தற்கொலைப் படை தீவிரவாதிகள், தங்கள் உடலில் சுமார் 10 கிலோ எடை கொண்டு குண்டுகளை கட்டிக்கொண்டு ரோந்து வாகனத்தின் மீது குதித்துள்ளனர்.
தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்தன.
இந்த தாக்குதல் நடந்து சில மணி நேரத்திலேயே லாகூரில் மட்டும் நேற்று இரவு தொடர்ச்சியாக ஐந்து இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
முதல் வெடிகுண்டு லாகூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் கடாரியா முன்பாக மண்ணில் புதைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
இரண்டாவதாக அதே பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு முன்னாள் கார் குண்டு வெடித்துச் சிதறியது.
மூன்றாவதாக இக்பால் டவுனில் உள்ள எதி சென்டரிலும், நான்காவது குண்டு டிஎஸ்பி காலித் ஜாவேத் வீட்டின் முன்பாகவும் வெடித்தன.
ஐந்தாவதாக கரிம் பிளாக்கில் உள்ள பெட்ரோல் பங்க் அருகிலும், ஆறாவதாக இக்பால் டவுன் பிஸ்மில்லா கவுக் என்ற இடத்திலும் வெடித்துச் சிதறின.
ஏழாவது குண்டு சமானாபாத் பகுதியில் வெடித்தது.
இந்த குண்டுவெடிப்புகளில் உயிர் சேதம் ஏற்பட வில்லை என்றாலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கட்டிடங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.
லாகூரில் நேற்று தொடங்கிய தொடர் குண்டுவெடிப்பு இன்று ஸ்வாத் மாவட்டத்தில் தொடர்ந்தது. ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள மிங்காரோ என்ற இடத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது தற்கொலைப் படை தீவிரவாதி குதித்து வெடிக்கச் செய்தான்.
இன்று காலை சுமார் 9 மணிக்கு நடந்த இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்த 5 கார்கள் உட்பட வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications