இலங்கை ராணுவ நீதிமன்றத்தில் பொன்சேகா ஆஜர்
கொழும்பு: ராணுவப் பணியின் போது அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றும்சாட்டப்பட்டுள்ள இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி பொன்சேகா இன்று ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய அப்போதைய ராணுவ தளபதி பொன்சேகா, போருக்கு பின்னர் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க சதி திட்டம் தீட்டுவதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார்.
தேர்தலில் தோற்ற கையோடு அதிரடியாக கைது செய்யப்பட்டார் பொன்சேகா. இதுவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று கொழும்பு நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் முதல் முறையாக இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு முன்பு பொன்சேகா நிறுத்தப்பட்டார். விசாரணைக் குழுவினர் மூவரும் பணி ரீதியாக தனக்கு ஜூனி்யர்கள் என்பதால், விசாரணைக்கு ஆஜராக பொன்சேகா முரண்டு பிடிப்பார் என கூறப்பட்டது.
மேலும் பொன்சேகா பணியில் நீக்கப்பட்ட நிலையில் அவர் மீது ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்க இலங்கையின் ராணுவ சட்டம் இடம் தராது என்றும், சிவில் கோர்ட்டில் தான் அவர் மீதான வழக்கு விசாரணை முறைப்படி நடக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா தெரிவித்திருந்தார்.
எனினும் இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு கடற்படை தலைமையகத்தில் விசாரணை குழுவினர் முன்பு பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை தொடங்கியது.












Click it and Unblock the Notifications