மக்கள் நம்பிக்கையை பெறாத கட்சி அதிமுக-வாசன்
சென்னை: அதிமுக மக்கள் நம்பிக்கையை பெறாத கட்சியாக உள்ளதாக மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக வரலாற்றில் முத்திரை பதிக்கக்கூடிய வகையில் புதிய சட்டசபை வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டத்திலேயே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து, வெளிநடப்பு செய்தது வருத்தமளிக்கிறது. முதல் நாளிலேயே அதிமுகவினர் நடந்து கொண்டவிதம் ஏற்புடையது அல்ல.
மத்திய அரசு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதேபோல தமிழக அரசும் மக்கள் நல பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது என்றார்.
கேள்வி: சட்டசபைக் கூட்டத்தின் முதல்நாளில் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லையே?
பதில்: பிரதான எதிர்க்கட்சி என்பது மக்கள் நம்பிக்கையை பெற்ற கட்சியாக இருக்க வேண்டும். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அவர்களால் குரல் எழுப்ப இயலவில்லை. அதிமுக மக்கள் நம்பிக்கையை பெறாத கட்சியாக உள்ளது.
கேள்வி: இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் உங்கள் ஆதரவாளர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே?
பதில்: ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸ் தேர்தலை புதிய முயற்சிகளுடன் பல விதிமுறைகளை பயன்படுத்தி நடத்தி வருகிறார். காங்கிரசை ஒரு பலமான இயக்கமாக வளர்ப்பதற்கு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அடித்தளமாக அமையும்.
கேள்வி: பென்னாகரம் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
பதில்: எங்கள் கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்றார் வாசன்.


Click it and Unblock the Notifications
