தேர்தலை நியாயமாக நடத்துவது சவாலாக உள்ளது-நரேஷ் குப்தா
பென்னாகரம்: தேர்தலை நியாயமாக நடத்துவது சவாலாக இருக்கிறது என்று இடைத் தேர்தல் நடக்கவுள்ள பென்னாகரம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினா.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
திமுக சார்பில் இன்பசேகரனும், அதிமுக சார்பில் அன்பழகனும், பாமக சார்பில் தமிழ்குமரனும், தேமுதிக சார்பில் காவேரிவர்மனும் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளருக்காக மாநில அமைச்சரவையே பென்னாகரத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. பாமக வேட்பாளருக்காக அக் கட்சியின் தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேமுதிக வேட்பாளருக்காக விஜய்காந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சுறுசுறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு்ள்ளனர்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 25ம் தேதி வரையும், முதல்வர் கருணாநிதி வரும் 24ம் தேதியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்றும், நாளையும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் விதிகளை மீறியதாக அனைத்துக் கட்சிகளும் மற்ற கட்சிகள் மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இந் நிலையில் நரேஷ் குப்தா இன்று பென்னாகரம் வந்தார். தேர்தல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் நடவடிக்கைகள், புகார்கள், வழக்குகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சவாலாக இருக்கிறது-நரேஷ் குப்தா:
இதையடுத்து தேர்தல் நிலைக்குழு கூட்டம் நடந்தது. அதில் அனைத்து கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது திமுக பிரதிநிதியைத் தவிர மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் குப்தாவிடம் சரமாரியாக புகார்களைத் தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குப்தா, தேர்தலை நியாயமாக நடத்துவது சவாலாக இருக்கிறது. தேர்தல் விதிமுறை மீறல் குறித்து இதுவரை 87 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பணப்பட்டுவாடா குறித்து வாக்காளர்கள் யாரேனும் புகார் கொடுத்தாலோ, அல்லது பணப் பட்டுவாடாவின்போது அதிகாரிகள் கண்ணில் அது பட்டாலோ வழக்கை வலுவாக பதிய முடியும் என்றார்.


Click it and Unblock the Notifications
