காஞ்சிபுரம்: ரெளடி நடராஜன் என்கெளண்டரில் சுட்டுக்கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே போலீஸ் என்கெளண்டரில் பிரபல தாதா மணல்மேடு சங்கரின் கூட்டாளியான ரெளடி நடராஜன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த போலீசார் மீது, இரண்டு முறை வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியபோது அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இன்று அதிகாலை 3 மணியளவில் காஞ்சிரபும் போலீசார் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் காஞ்சீபுரம்- அரக்கோணம் சாலையில் படுநெல்லி என்ற இடத்தில் வாகன சோதனையி்ல் ஈடுபட்டிருந்தபோது ஒரு பைக் நிற்காமல் சென்றது.
இதையடுத்து போலீசார் அந்த பைக்கை ஜீப்பில் விரட்டிச் சென்றனர்.
அப்போது திடீரென ஜீப் மீது அந்த பைக் ஆசாமி இரண்டு முறை நாட்டு வெடிகுண்டுகளை வீசினான். ஆனால், அதையும் மீறி அவனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவன் அருகே சென்ற இன்ஸ்பெக்டரை வீச்சரிவாளால் தாக்க முயன்றான். இதையடுத்து போலீசார் 6 ரவுண்டுகள் சுட்டதில் அந்த ஆசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனது மார்பு, வயிறு, தோள்பட்டை ஆகிய இடங்களில் குண்டுகள் பாய்ந்தன.
பின்னர் இறந்த அந்த நபரின் அடையாளம் காணப்பட்டது.
அவன் சென்னை பிராட்வே சி.ஆர்.என். காலனியைச் சேர்ந்த பிரபல ரெளடி நடராஜன் என்று தெரியவந்துள்ளது. அவனிடமிருந்து வீச்சரிவாள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நடராஜனின் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் சம்பத், ஏட்டு ரமேஷ் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவன் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் நிலுவையி்ல் உள்ளன.
நடராஜனின் சொந்த ஊர் கும்பகோணம் மணல்மேடு அருகில் உள்ள சின்ன இலுப்பைபட்டு கிராமம் ஆகும். இவனது அண்னன்கள் கோபிநாத், குற சிவா. இதில் குற சிவாவும், குற நடராஜனும் இளம் வயதில் இருந்தே ரெளடிகளாகிவிட்டனர்.
திருச்சியில்தாதாவாக வலம் வந்த மணல்மேடு சங்கருக்கு வலது கரமாக இருந்தனர்.
2002ம் ஆண்டு மணல்மேடு சங்கரின் எதிரியான ஆத்தூர் கண்ணையன் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு ஜல்லி ராஜா, 2007ம் ஆண்டு சீனிவாசன் ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர். இதில் நடராஜனுக்கு முக்கிய பங்கு உண்டு.
இந் நிலையில் மணல்மேடு சங்கர் 2008ம் ஆண்டு போலீஸ் எண்கெளண்டரில் பலியானான்.
மணல்மேடு சங்கர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைசெல்வன் தான் காரணம் என்று நினைத்த நடராஜன் தன் கூட்டாளிகளுடன் சென்று கலைசெல்வனைக் கொன்றான்.
மேலும் கலைசெல்வனின் தம்பி பூண்டி கலையசரனுக்கும், நடராஜன் குறி வைக்கவே இதை அறிந்த போலீசார் நடராஜனை கைது செய்ய முயன்றனர். ஆனால், தப்பி தலைமறைவாகிவிட்டான்.
இந் நிலையில் தான் இன்று காஞ்சிபுரம் போலீசாரின் குணடுக்கு பலியாகியுள்ளான்.












Click it and Unblock the Notifications