விபத்துகளை ஏற்படுத்தும் 100க்கும் மேற்பட்ட மணல் லாரிகளைப் பிடித்து மக்கள் போராட்டம்
மதுராந்தகம்: அதிவேகமாக சென்று பலரது உயி்ர்களைப் பறித்து வரும் மணல் லாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து மதுராந்தகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் சாலையில் மேலவளம் கிராமம் உள்ளது. இந்த பகுதி வழியாக ஏராளமான மணல் லாரிகள் செல்கின்றன. இந்த மணல் லாரிகள் அதிக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த மணல் லாரிகள் அடிக்கடி அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த வாரம் இது போல பள்ளிக்கு சென்ற மாணவன் மீது மணல் லாரி மோதியது. இதில் அந்த மாணவர் படுகாயம் அடைந்தார்.
அப்போது பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மணல் லாரிகளை அந்த பகுதியில் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை மணல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இன்று காலை மேலவளம் கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 10-க்கும் மேற்பட்ட பஸ்கள், 100-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த மறியலால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 10-ம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகள் நடுவழியில் தவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.
அதற்கு பொதுமக்கள், இந்த பகுதியில் மணல் லாரிகளை தடை செய்ய வேண்டும், அல்லது பள்ளி மாணவர்கள் செல்லும் நேரங்களிலாவது மணல் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு ஏமாற்றி விடுகிறார்கள். எனவே கலெக்டர் வந்து பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுத்தால் தான் மறியலை கைவிடுவோம் என்றனர்.
இந்த மறியல் தொடர்பாக ஆர்.டி.ஓ. கூறுகையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பொதுமக்களை அழைத்துள்ளோம். அவர்கள் வந்தால் சுமூக தீர்வு காணப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications