கல்வி உரிமைச் சட்டம் அமல் - பெற்றோர், ஆசிரியருக்கு பிரதமர் வேண்டுகோள்

இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் மொத்தம் சுமார் 22 கோடி பேர் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
இவர்களில் 92 லட்சம் பேர் பள்ளிக் கல்வியை முழுமையாக பெறாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.
எனவே குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வியை கட்டாயமாக்குவது அல்லது அடிப்படை உரிமையாக்கும் வகையில் கடந்த 2002ம் ஆண்டு அரசியல் சாசன சட்டத்தில் 86வது திருத்தம் செய்யப்பட்டது. இதன் பிறகு இச்சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டாயம் பள்ளிக் கல்வி கற்பதை மாநில அரசுகள் உறுதி செய்தாக வேண்டும்.
இதற்கான செலவை மத்திய அரசும், மாநில அரசுகளும் 55க்கு 45 என்ற விகிதத்தில் பகிர்ந்து பொறுப்பெடுத்துக் கொள்ளும்.
மேலும், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்காக சேர்க்கை இடங்களில் 25 விழுக்காடு கட்டாயம் ஒதுக்கியாக வேண்டும்.
ஆனால், அரசிடம் நிதியுதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில் அரசு குறுக்கிடுவதாகக் கூறி, இந்த முடிவை எதிர்த்து சில பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆனால், அந்த வழக்கினால் கல்வி அடிப்படை உரிமை சட்டம் அமலாவதில் எந்த சிக்கலும் இருக்காது என மத்திய மனித வள அமைச்சர் கபில்சிபல் உறுதி அளித்துள்ளார்.
கல்வி அடிப்படை உரிமை சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதை ஒட்டி இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் தனது உரையில் கூறியிருப்பதாவது:
கல்வியை இலவசமாகவோ அல்லது கட்டாயமாகவோ பெறுவதை குழந்தைகளின் அடிப்படை உரிமையாக்கும் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் நம் குழந்தைகள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பார்கள் என்பதை நம்மால் உறுதி செய்ய இயலும் என நம்புகிறேன்.
இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டுவதற்கு மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும்.
இளைஞர்களின் நாடான இந்தியா வளர்ச்சி அடையவும், தனி நபர் மேம்பாட்டுக்காகவும், குடும்பங்களின் நலனிலும் கல்வி மிக முக்கியமான மற்றும் அடிப்படை பங்கு வகிக்கும் அம்சமாக உள்ளது.
எனவே இந்த கல்வியை வருங்கால சந்ததியினருக்கு குறைவில்லாமல் வழங்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
நம் குழந்தைகள் அனைவரும் கல்வி பெறுவதை உறுதி செய்துவிட்டோமானால், அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டு விட்டதாக ஆகிவிடும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலின பாகுபாடு போன்றவற்றை தாண்டி அனைத்து குழந்தைகளும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டியதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.
ஆண், பெண், ஏழை, பணக்காரர் என யாராக இருந்தாலும் கல்வி அறிவு பெற்று, பல்வேறு திறன்களை வளர்த்து உயர்ந்த நிலையை அடைந்து பொறுப்பான குடிமக்களாக உருவாக இந்த சட்டம் உதவும்.
அனைத்து மாநில அரசுகள், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவரும் இந்த முயற்சியில் பங்கேற்று வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications