தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி

இதன்மூலம் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை கூடுதலாக்க பள்ளிக்கல்வி இயக்குனரகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரைக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை வருகிற கல்வி ஆண்டிலேயே அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி எல்லா பள்ளிகளிலும் ஒரே சீரான பாடத்திட்டங்களே பின்பற்றப்படும் என்பதால், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து தரமான அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என்ற எண்ணம் பெற்றோர் மனதில் எழுந்துள்ளது.
அதோடு 14 வயது வரையிலான குழந்தைகள் இலவச கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கி சட்டமும் அமலாக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கூடுதலாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'ஒவ்வொரு பகுதியிலும் ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பள்ளிக்கு செல்லும் வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கட்டாய இலவச கல்வியை பெற்றோரிடம் எடுத்துக்கூற வேண்டும். அரசு அளிக்கும் இலவச கல்வி, இலவச பாடப்புத்தகங்கள், இலவச பஸ் பாஸ் போன்ற சலுகைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்.
அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க பள்ளிகளில் உள்ள வசதிகளை எடுத்துக்கூறவேண்டும்.
ஆசிரியர் பயிற்றுனர், ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோர் இணைந்து பள்ளிகளில் இடை நின்ற மாணவர்களை கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க முயற்சி எடுக்கவேண்டும்.
குழந்தை தொழிலாளர் முறையை கண்டறிந்து அந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க கடும் முயற்சி எடுக்கவேண்டும்.
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும். செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறையை பெற்றோர்கள் அறியும் வண்ணம் கிராம கல்விக்குழு கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் கூட்டி நடத்த வேண்டும்.
பள்ளிகளின் முன்னேற்ற செயல்பாடுகளை பெற்றோர்கள் அறியும் வண்ணம் விளம்பர பலகை, துண்டு பிரசுரங்கள் மூலம் அறியச் செய்தல்.
மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக பாடத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதை தெரிவிக்கவேண்டும்.
ஆறாவது வகுப்பில் படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுவதை பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
