Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலக்கரி இறக்குமதி தொடர்பாக புளுகி வருகிறார் ஜெயல்லிதா - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்த நிலக்கரி மொத்தம் சுமார் 83 லட்சம் டன்கள்தான். ஆனால் ஜெயலலிதா 680 லட்சம் டன் நிலக்கரி இந்த இடைக் காலத்தில் இறக்குமதி செய்ததாக அறிக்கையிலே புளுகியிருக்கிறார். இது முற்றிலும் தவறான புள்ளி விவரமாகும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நிலக்கரி இறக்குமதி குறித்து ஜெயலலிதா மீண்டும் விடுத்த அறிக்கையில் - "2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் - பல்வேறு விலைகளில் 680 லட்சம் டன் நிலக்கரியை (சராசரியாக ஆண்டிற்கு 13 மில்லியன் டன் நிலக்கரி) தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்திருக்கிறது'' - என்று சொல்லியிருக்கிறார்.

2005-06-ல் இறக்குமதி செய்த நிலக்கரி சுமார் 11 லட்சம் டன். 2006-07-ல் இறக்குமதி செய்த நிலக்கரி சுமார் 11 லட்சம் டன். 2007-08-ல் இறக்குமதி செய்த நிலக்கரி சுமார் 18 லட்சம் டன். 2008-09-ல் இறக்குமதி செய்த நிலக்கரி சுமார் 23 லட்சம் டன். 2009-10-ல் இறக்குமதி செய்த நிலக்கரி சுமார் 20 லட்சம் டன்.

ஜெயலலிதா குறிப்பிட்ட இந்தக் காலக் கட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்த நிலக்கரி மொத்தம் சுமார் 83 லட்சம் டன்கள்தான். ஆனால் ஜெயலலிதா 680 லட்சம் டன் நிலக்கரி இந்த இடைக் காலத்தில் இறக்குமதி செய்ததாக அறிக்கையிலே புளுகியிருக்கிறார். இது முற்றிலும் தவறான புள்ளி விவரமாகும்.

ஐந்தாண்டுகளில் 83 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா 680 லட்சம் டன் என்று அறிக்கை விடுகிறார் என்றால் அவரைப் பற்றி நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா தனது அறிக்கையில் சராசரியாக ஆண்டிற்கு 13 மில்லியன் டன் அதாவது 130 லட்சம் டன் நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்ததாகச் சொல்லுகிறார். ஆனால் சராசரியாக ஆண்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி 17 லட்சம் டன் தான். அதாவது சுமார் 2 மில்லியன் டன்கள் தான்.

ஜெயலலிதா தனது அறிக்கையில் சராசரியாக ஆண்டுக்கு 13 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் தற்போதைய நிலக்கரி தேவையான ஆண்டு ஒன்றுக்கு 15 மில்லியன் டன் நிலக்கரியில் 13 மில்லியன் டன் நிலக்கரி மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்ட நிலக்கரி நிறுவனத்தின் மூலமாகக் கிடைத்துவிடுகிறது. மீதி சுமார் 2 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே ஆண்டு ஒன்றுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால் ஆண்டு ஒன்றுக்கு 13 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அம்மையார் அறிக்கையிலே கூறுகிறார் என்றால் அது எப்படிப்பட்ட தவறான தகவல் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டிற்கும் இறக்குமதி செய்த நிலக்கரியின் மதிப்பு 3 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி விடும் என்று சொல்லியிருக்கிறார். இதுவும் தவறான தகவல் தான்.

2005-2006-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை சுமார் 392 கோடி ரூபாய் தான்.

2006-2007-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை சுமார் 346 கோடி ரூபாய் தான். 2007-2008-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை சுமார் 558 கோடி ரூபாய் தான். 2008-2009-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை சுமார் 1,193 கோடி ரூபாய் தான். 2009-2010-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை சுமார் 992 கோடி ரூபாய் தான். ஆனால் ஜெயலலிதா தனது அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மதிப்பு 3 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிடும் என்று சொல்கிறார் இதுவும் எவ்வளவு தவறான விவரம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் "2010-ம் ஆண்டில் ஒரு டன் நிலக்கரி அமெரிக்க டாலர் 120 என்ற விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது'' என்று சொல்லியிருக்கிறார். இதுவும் தவறான தகவல் தான். 2010-ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு டன் நிலக்கரியின் விலை நான் ஏற்கனவே அறிக்கையில் தெரிவித்ததைப் போல 90 முதல் 95 டாலர்கள் மட்டுமே. ஆனால் டன் ஒன்றுக்கு 120 அமெரிக்க டாலர் விலை கொடுத்து இறக்குமதி செய்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா தனது முதல் அறிக்கையில் 2010-ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மூலமாக மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்த ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2 மில்லியன் டன் நிலக்கரிக்கு கொடுக்கப்பட்ட விலையே சுமார் 992 கோடி ரூபாய் என்கிற போது அதிலே எவ்வாறு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க முடியும் என்று கேட்டிருந்தேன். அது பற்றித்தான் 520 கோடி ரூபாயா அல்லது ஆயிரம் கோடி ரூபாயா என்றெல்லாம் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

ஒரு மில்லியன் டன் என்கிற போது 520 கோடி ரூபாய் என்பதும், 2 மில்லியன் டன் என்கிற போது விலை சற்றுக் குறைந்ததால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் என்றும் எனது அறிக்கையிலே விளக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் - 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சில நிறுவனங்கள் குறைந்த விலையில் நிலக்கரியை வழங்க முன் வந்ததாகவும், அதைவிட அதிக விலை கொடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரி வாங்கியதாகவும் கூறியிருக்கிறார்.

2010-ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி வாங்குவதற்காக எந்தவிதமான ஒப்பந்தப் புள்ளியும் கோரப்படவே இல்லை. இந்த அரசைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தனிப்பட்டவர்களிடம் இருந்து நிலக்கரியை வாங்கினால், அதன் காரணமாக புகார்கள் ஜெயலலிதாவைப் போல சிலர் சொல்லக் கூடும் என்பதாலேயே மத்திய அரசின் நிறுவனமான எம்.எம்.டி.சி. மூலமாகத் தான் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வாங்குகிறதே தவிர, மின்சார வாரியம் தனிப்பட்ட முறையில் இதனைச் செய்வதில்லை என்பது தான் உண்மை. 2005-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே கூட நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில், இதே மத்திய அரசின் நிறுவனமான எம்.எம்.டி.சி. மூலமாகத் தான் நிலக்கரி பெறப்பட்டது. அதே முறை தான் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் "ஸ்டார் எம்சன்ஸ் ரிசோர்ஸ் என்ற இந்தோனேசிய நிறுவனத்திற்கு நிலக்கரிக்கான இறக்குமதி உத்தரவைக் கொடுத்தது குறித்து கருணாநிதி மறுக்கவில்லை'' என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா போன்ற முன்னாள் முதல்வர், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற காரியங்களில் நுனிப்புல் மேயக் கூடாது. எனது அறிக்கையை முழுவதுமாகப் படிக்காமலேயே யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே அறிக்கையாக தந்து விடக்கூடாது.

இது பற்றி எனது முந்தைய அறிக்கையில் கூறியுள்ளதை ஜெயலலிதா இப்போதாவது தெரிந்து கொள்வதற்காக மீண்டும் குறிப்பிடுகிறேன். "ஜெயலலிதா தனது அறிக்கையில் ஸ்டார் எம்சன்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் இருந்து தான் பெரும்பாலான நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்கிறது என்றும், இந்த நிறுவனம் தலைமைச் செயலகத்தை கட்டுகின்ற நிறுவனத்திற்கு வேண்டிய நிறுவனம் என்றும் ஜெயா கூறியிருக்கிறார். இதுவும் முற்றிலும் தவறான தகவல்.

ஸ்டார் எம்சன்ஸ் ரிசோர்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. மத்திய அரசின் நிறுவனமான எம்.எம்.டி.சி. மூலமாகத் தான் தமிழ்நாடு மின்சாரவாரியம் நிலக்கரியைப் பெறுகிறது. தலைமைச் செயலகக் கட்டிடப் பணியும் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு முறைப்படி தான் அளிக்கட்டுள்ளது. எனவே கனவுலகத்தில் இருந்து அம்மையார் ஜெயலலிதா மீண்டு வருவது நல்லது'' என்று நான் எழுதியிருந்ததைப் படிக்காமலேயே - நான் அவர் கூறியதை மறுக்கவில்லை என்று தற்போதைய அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.

இது ஒன்றில் இருந்தே அவர் எழுதியிருப்பது எல்லாம் முன்பு அவரே கூறியிருப்பது போல எப்படியோ கிடைத்த தகவல் என்பது உறுதியாகிறது. அரசாங்கம் மாறப் போகிறது என்ற நம்பிக்கையில் யாரோ அதிகாரிகள் இத்தகைய செய்திகளை அல்லது ரகசியங்களை தனக்கு மட்டும் தெரிவிப்பதாக ஜெயலலிதா அவரது அறிக்கையில் தம்பட்டம் அடித்திருக்கிறார். ஜெயலலிதாவை ஏமாற்ற யாரோ அதிகாரிகள் இது போன்ற கற்பனைகளையும், பொய்களையும் தாங்கள் கண்டுபிடித்த செய்திகளாக ஜெயலலிதாவிடம் கூறி, ஜெயலலிதாவை ஏமாற்றுகிறார்கள். யார் அவர்கள் என்று தெரிவதற்கும் - அந்த விஷமிகளின் முகமூடி கிழிவதற்கும் வெகுநாட்கள் ஆகாது என்று கூறியுள்ளார் கருணாநிதி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+