சானியா- சோயப் கல்யாணம் கடந்த வாரமே துபாயில் முடிந்து விட்டது?
ஹைதராபாத்: ஆயிஷா சர்ச்சை ஒரு பக்கம் நீண்டு கொண்டிருந்த நிலையில், சானியா மிர்ஸாவுக்கும், சோயப் மாலிக்குக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே துபாயில் வைத்து கல்யாணம் முடிந்து விட்டதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற 15ம் தேதி நடக்கவிருப்பது வரவேற்பு நிகழ்ச்சி என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணப்பதால் இந்தியாவில் பிரச்சினை வரக் கூடும் என்று அஞ்சிய சானியா குடும்பத்தினர் துபாயில் வைத்து கல்யாணத்தை முடித்த பின்னர்தான், கல்யாணச் செய்தியை வெளியில் கசிய விட்டனராம்.
கல்யாணம் முடிந்த நிலையில்தான் சோயப் மாலிக் ஹைதராபாத் வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது சானியா வீட்டில்தான் சோயப் மாலிக் தங்கியுள்ளார். மேலும் ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன. இது கல்யாணத்திற்காக புக் செய்யப்படவில்லையாம். மாறாக நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காகத்தான் புக் ஆகியுள்ளனவாம்.
சானியாவின் கல்யாணப் பத்திரிக்கையில் நிச்சயதார்த்த தேதி என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் கல்யாணம் ஏற்கனவே நடந்திருக்கலாம் என்ற வாதத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. திருமணம் தள்ளிப் போகலாம் என்று பலரும் கூறி வந்த நிலையில், திருமணமே முடிந்து விட்டதாக வெளியாகியுள்ள புதிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதை விட முக்கியமாக, கல்யாணத்திற்கு முன்பு எந்த ஒரு மணமகனையும், மணமகள் வீட்டில் தங்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் சோயப் மாலிக் கடந்த ஒரு வாரமாக சானியா வீட்டில்தான் தங்கியுள்ளார். இதை இஸ்லாமிய சமூகப் பெரியவர்கள் கேள்வி கேட்கவில்லை. இதன் மூலம் ஏற்கனவே அவர்களுக்கு கல்யாணமாகி விட்டது, அதனால்தான் யாரும் அதை ஆட்சேபிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சோயப்பை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து சானியாக உறுதியாக இருந்து வந்ததற்கும் கூட அவர் ஏற்கனவே கணவராகி விட்டதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
கல்யாணம் நடந்ததோ, இல்லையா, ஆயிஷா ரூபத்தில் வந்த பிரச்சினையிலிருந்து சோயப் மீண்டிருப்பது நிச்சயம் சானியா குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications