டெல்லி சீக்கியர்கள் படுகொலை – கமல்நாத் மீது அமெரிக்காவில் வழக்கு - கோர்ட் சம்மன்
டெல்லி: இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் டெல்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டள்ளது. இதையடுத்து கமல்நாத்துக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் டெல்லியில சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்த்து. பல ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் கமல்நாத் மீது இந்தக் கலவரம் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜஸ்பீர் சிங், மகீந்தர் சிங் ஆகிய இருவரும், நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவர்களின் வக்கீல் குப்தவந்த் பன்னுன் வழக்கு குறித்துக் கூறுகையில், ஜஸ்பீர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 24 பேரை இந்தக் கலவரத்திற்குப் பலி கொடுத்தவர். கலவரம் நடந்தபோது மகீந்தர் சிங்குக்கு 2 வயது நடந்து கொண்டிருந்தது. கலவரத்தில் அவரது தந்தை கொலை செய்யப்பட்டார்.
இநதியாவில் மனித உரிமைகளை மீறுவோர் தண்டிக்கப்படுவது என்பது இயலாத காரியம். எனவேதான் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என இத்தனை காலமும் நம்பியிருந்தோம். ஆனால் வீண் போனதால்தான் தற்போது அமெரிக்காவிடம் நீதி நாடி கோர்ட்டை அணுகியுள்ளோம்.
கமல்நாத் கடந்த 25 ஆண்டுகளாக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பி வந்துள்ளார். இனியும் அவர் தப்பக் கூடாது என்றார்.
ஆனால் தன் மீது ஏன் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றே புரியவில்லை என கமல்நாத் வியப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வழக்கு எனக்கு வியப்பளிக்கிறது, குழப்பமாகவும் உள்ளது.
என் மீது ஏன் வழக்கு என்று புரியவில்லை. இந்த வழக்கின் நம்பகத்தன்மையும் எனக்குப் புரியவில்லை. என் மீது சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்படுவது இதுதான் முதல் முறையாகும்.
என்னிடம் சம்மன் என்று கூறி ஒரு பேப்பர் வந்துள்ளது. அந்த பேப்பரை நான் இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. படித்தால்தான் தெரியும்.
இந்தியாவில் எந்தக் கோர்ட்டிலும் என் மீது இதுதொடர்பாக வழக்கு இல்லை. என்னிடம் யாரும் எந்த விசாரணையும் நடத்தியதில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் என்னைத் தொடர்புப்படுத்தி, அதுவும் எங்கோ தூரத்தில் உள்ள ஒரு நாட்டிலிருந்து கேள்வி எழுந்துள்ளது வேடிக்கையாக உள்ளது என்றார் கமல்நாத்.
21 நாட்களுக்குள் கமல்நாத் பதிலளிக்க வேண்டும் என அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதாம். மீறினால் ஒருபக்கமாக தீர்ப்பளிக்கப்படும் எனவும் அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications