ராமேசுவரம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய இலங்கைப் படகு
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே கடல் பகுதியில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமேசுவரம் சேரான்கோட்டை கடற்கரையில் நேற்று அதிகாலை இலங்கையை சேர்ந்த ஒரு பிளாஸ்டிக் படகு நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த படகில் வந்தவர்கள் படகை கடற்கரையிலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மர்மமான முறையில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த படகு குறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனிப்பிரிவு போலீசார் விரைந்து சென்று அந்த படகை பார்வையிட்டு சோதனை செய்தனர்.
படகின் முன்பகுதியில் எஸ்எஸ்கே 0927 என்று எழுதப்பட்டிருந்தது. பக்கவாட்டில் மயில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. '8410 கிராஸ் தெரு, கொழும்பு' என்றும் எழுதப்பட்டிருந்தது.
மேலும் அந்த படகில் 2 நண்டு வலைகள், என்ஜின் வேகத்தை அதிகரிக்க கூடிய 2 ரோலர் காற்றாடிகள், பாதியளவு டீசல், மண்எண்ணையுடன் 2 கேன்கள் இருந்தன.
9.9 குதிரை சக்தி கொண்ட என்ஜின் அந்த படகில் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த வகை படகுகளை இலங்கை மன்னார் பகுதியில் உள்ள மீனவர்கள் தான் மீன்பிடிக்க பயன்படுத்துவார்கள்.
எனவே இந்த படகில் வந்த நபர்கள் இலங்கையை சேர்ந்த மீனவர்களா? அல்லது அவர்களது படகை கடத்திக் கொண்டு வந்து வேறு யாராவது தப்பிச் சென்று இருக்கலாமா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications