தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.14,353 கடன் சுமை - அன்பழகன்

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. அப்போது மாநில கடன்சுமையில் சிக்கியிருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டி பேசினார்கள்.
அதற்கு பதில் அளித்து நிதியமைச்சர் அன்பழகன் பேசுகையில்,
'தமிழக அரசு அதிகளவு கடன் தொகை வாங்கி கடனில் மூழ்கிவிடும் என்றார்கள். உலகம் முழுவதும் நிதி பற்றாக்குறை உள்ளது. இது கடன் திரட்டுவதன் மூலமே சரி செய்யப்படுகிறது.
மக்கள் நலத்திட்டங்களை ஒத்திப்போட இயலாது. திட்டங்களை ஒத்திப்போட்டால் செலவு அதிகமாகும். அதனால் கடன் வாங்கி உரிய காலத்துக்குள் திட்டங்களை முடித்துவிடுவதே சிறப்பு. பயனும் கிடைக்கும்.
அமெரிக்காவின் கடன் ரூ.12.67 லட்சம் கோடி ஆகும். தமிழகத்தில் 2009-10 இறுதியில் மொத்த கடன் பொறுப்புகள் ரூ.89,140 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அது மராட்டியத்தில் ரூ.1 லட்சத்து 79,727 கோடியாகவும், ஆந்திரத்தில் 1 லட்சத்து 9,757 கோடி ரூபாயாகவும், கர்நாடகத்தில் ரூ.79 ஆயிரத்து 644 கோடியாகவும், கேரளாவில் ரூ.70 ஆயிரத்து 117 கோடியாகவும் உள்ளது. கேரளத்தில் ரூ.70 ஆயிரம் கோடி இருக்கும் போது தமிழகத்தில் ரூ.89 ஆயிரம் கோடி என்பது பரவாயில்லை.
தனி நபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது.
தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.
தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது.
தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல' என்றார்.












Click it and Unblock the Notifications