அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி இல்லை: பிருந்தா கரத்
நெல்லை: தமிழகத்தில் அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி சேரவில்லை. தேர்தல்களில் வெறும் தொகுதி உடன்பாடுகள் தான் மேற்கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் குழு உறுப்பினர் பிருந்தா கரத் கூறினார்.
தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி நெல்லை பாளையங்கோட்டையில் வாழ்வுரிமை மாநாடு நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிருந்தா கரத் எம்பி கலந்துகொண்டார்.
முன்னதாக பிருந்தா கரத் நிருபர்களிடம் பேசுகையில், 'விலைவாசி உயர்வை கண்டித்து வரும் ஏப்ரல் 27ம் தேதி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்கிறோம்.
தமிழகத்தில் அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி சேரவில்லை. தேர்தல்களில் வெறும் தொகுதி உடன்பாடுகள் தான் மேற்கொள்கிறோம்.
எனினும் வரும் 27ம் தேதி நடக்கும் பொதுவேலை நிறுத்தத்தில் அதிமுகவும் கலந்துகொள்கிறது.
இந்து மதம் மட்டுமின்றி இதர கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மை மதங்களை சேர்ந்த தலித் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கூறியுள்ளது.
இந்த பரிந்துரையை உடனே அமுல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகிறோம்.
இடஓதுக்கீட்டை பெற மதம் குறுக்கீடாக இருக்க கூடாது. அந்தந்த பிரிவில் பிறந்தவர்கள் உரிய இடஒதுகீட்டை பெற தகுதி உடையவர்கள் என அரசியல் சட்டம் தெளிவாக கூறுகிறது.
ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட மத்திய அரசு முன்வரவில்லை. கமிஷன் அறிக்கையை வெளியிடும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு வலியுறுத்தியது.
இரண்டு நாட்கள் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும் வரை போராடி பின் அறிக்கை வெளியானது. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை பரிந்துரையை அமல்படுத்துவதில் மத்திய அரசு ஏன் அமைதி காக்கிகிறது என தெரியவில்லை.
ஐபிஎல் போட்டிகள் வியாபாரமாகி விட்டன. இந்த வியாபார சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய இணை அமைச்சர் சசி தரூர் முதலில் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications