மும்பை, டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் ரயில்- அமைச்சர் தகவல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு விரைவில் புதிய ரயில்கள் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி - ஹவுரா வாராந்திர அதிவேக ரயில் துவக்க விழா புதுச்சேரி ரயில் நிலைய்த்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக கூட்டதில் பேசிய முதல்வர் வைத்திலிங்கம் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து புதுச்சேரியை இணைக்கும் ரயில்கள் இயக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய இணையமைச்சர் நாராயணசாமி, 'புதுவைக்கு அரவிந்தர் வருகை தந்ததன் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் மேற்கு வங்கத்திலிருந்து புதுவைக்கு ரயில் விட வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தாபானர்ஜியிடம் கோரிக்கை வைத்தேன்.
அதன்படி அவர் இந்த வாய்ப்பை அளித்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கும், மும்பைக்கும் ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் புதுவை - சென்னைக்கு சதாப்தி ரயில் சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையத்துக்கும், பஸ் நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கும் ஆட்டோவில் செல்வதற்கான கட்டணம் ரயிலில் வந்து செல்வதற்கான கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது.
அதனால் இவற்றுக்கிடையே பஸ் சேவையை புதுச்சேரி அரசு செய்ய வேண்டும்' என்றார்.


Click it and Unblock the Notifications
