விளாத்திக்குளம் அருகே சூறைக்காற்றுடன் மழை - மின்னலுக்கு 3 பேர் பலி!
விளாத்திகுளம்: விளாத்திகுளம் மற்றும் பாவூர்சத்திரம் பகுதியில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி பிளஸ்டூ மாணவி உள்பட 3 பேர் பலியாகினர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆங்கங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று விளாத்திகுளம், கரிசல்குளம், இடைச்சியூரணி, நூத்தலங்கரை, கீழஈரல் பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.
இடைச்சியூரணியை சேர்ந்த சி்ன்னசோலையப்பன் மகள் மகேஸ்வரி என்பவர் நேற்று மதியம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது உறவினர்களுக்கு சாப்பாடு கொண்டு சென்றார்.
அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். பிளஸ்டூ தேர்வு எழுதியுள்ள இவர் கோடை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இதேபோல், புதூர் அருகேயுள்ள நுத்தலங்கரையை சேர்ந்தவர் முருகன் மனைவி அழகுலெட்சுமி என்பவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பலியானார்.
தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் தாசில்தார் செந்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இருவரது உடல்களும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதே போல் பாவூர்சத்திரம் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது மாடநாடானுரை சேர்ந்த திருமலையாண்டி மனைவி பொட்டுகனி என்பவர் பஞ்சாண்டியூர் அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது மின்னல் தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். புளியங்குடி பகுதியில் மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் இறந்தன. சூறைக்காற்றில் 5க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
விளாத்திகுளம் பகுதியில் தொடர் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் விளாத்திகுளத்தில் இருந்து எட்டையாபுரம் செல்லும் சாலையில் 5க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications