ஏப்ரல் 26ம் தேதி பதவி விலகுமாறு லலித் மோடியை கேட்டுக் கொள்ள பிசிசிஐ முடிவு

வரலாறு காணாத சிக்கலில் இந்திய கிரிக்கெட் வாரியத்தைத் தள்ளி விட்டுள்ளார் மோடி. வருமான வரித்துறை கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல்லின் கணக்கு வழக்குகளை, நிதி நிர்வாகத்தைத் தோண்டி எடுக்கவுள்ளது. மேலும், கிரிக்கெட் வாரியத்திற்கு சம்மனும் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.
இதன் காரணமாக கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மோடியை நீக்கும் முடிவுக்கு அவர்கள் வந்து விட்டனர்.
மும்பையில் கிரிக்கெட் வாரிய கூட்டம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தற்கு மோடி அழைக்கப்படவில்லை.
அன்றையக் கூட்டத்தல், ஏப்ரல் 26ம் தேதி பதவி விலகுமாறு மோடிக்கு உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.
ஒருவேளை மோடி விலகாவிட்டால் அவரை டிஸ்மிஸ் செய்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டப்படும் என்று தெரிகிறது.
பெட்டிங்கில் பணம் பார்த்த மோடி
இதற்கிடையே, லலித் மோடி சூதாட்டம், ரகசிய பேரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண நபராக இருந்து வந்த மோடி தற்போது ஒரு விமானத்தை வைத்துள்ளார். மிகப் பெரிய சொகுசுக் கப்பல் அவருக்கு உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் வகை காரை வைத்துள்ளார். பிஎம்டபிள்யூ கார் வைத்துள்ளார். அனைத்தையும் அவர் 3 ஆண்டுகளில் சம்பாதித்துள்ளார் என்றும் வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக மோடியைக் கண்காணித்து வந்த வருமான வரித்துறை அவர் தொடர்பான ஒரு அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையின் விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.
கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் மோதினார் மோடி. இதையடுத்து அவர் குறித்த விவரங்களையும், ஐபிஎல் நிர்வாகம் குறித்தம், அணிகளின் பண புழக்கங்கள் குறித்து ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்ததாம் வருமான வரித்துறை.
வருமானவரித்துறை அறிக்கையில் மோடியின் நிழல் உலக வாழ்க்கை குறித்து விலாவாரியாக கூறப்பட்டுள்ளதாம்.
ராஜஸ்தானில் அவர் மேற்கொண்ட நில முறைகேடுகள், பல நூறு கோடி கணக்கில் அவர் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விட அதிர்ச்சிகரமாக பெட்டிங் எனப்படும் கிரிக்கெட் சூதாட்டத்திலும் மோடி ஈடுபட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை பிக்ஸ் செய்துள்ளார் மோடி என்றும் கூறப்படுகிறது.
இந்த பெட்டிங் வேலைகளில் அவர் முதல் இரு ஐபிஎல் தொடர்களில் ஈடுபட்டதாகவும், இந்த தொடரில் அவர் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் இ மெயில் முகவரி, இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றைக் கண்காணித்து மோடி குறித்த தகவல்களை வருமான வரித்துறை தோண்டி எடுத்துள்ளதாம்.
சூதாட்டம் தவிர கருப்புப் பணம், பண மோசடி உள்ளிட்டவற்றிலும் மோடி ஈடுபட்டதாக வருமான வரித்துறை அறிக்கை கூறுகிறது.
மோடி தவிர அவரது உதவியாளர்கள், கூட்டாளிகள் சிலரையும் வருமான வரித்துறை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.
மோடியின், மோடி என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனத்தன் தலைமை செயலதிகாரியாக இருப்பவர் தீபா ரெய்ஸாதா. இவர்தான் மோடியின் வெளிநாட்டு பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றைக் கவனித்து வருகிறாராம். இவரையும் வருமான வரித்துறை தனது கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளது. கடந்த 10 வருடங்களாக தீபா இங்கு பணியாற்றி வருகிறார்.
மோடிக்காக பெட்டிங்கில் ஈடுபட்ட நபரையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபரின் பெயர் சமீர் துக்ரால். இவர்தான் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாடி வருபவர். போட்டிகளின் முடிவுகளையும் நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவராம் இவர். மோடிக்காக இவர்தான் பெட்டிங்கில் ஈடுபட்டு வந்த்தாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோடி மூன்று ஐபிஎல் அணிகள் மீதுதான் மிகுந்த நட்புறவுடன் இருந்து வருகிறார். எனவே அந்த அணிகள் கலந்து கொண்ட போட்டிகளின் முடிவுகளை தற்போது வருமான வரித்துறையினர் ஆராய்ந்து வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications