சிலை திறப்புக்கு கருணாநிதி வருவதை எதிர்க்கவில்லை- உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறக்க முதல்வர் கருணாநிதி வருவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, வரவேற்கிறோம் என்று சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கார் உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. திறப்பு விழா 25-ந் தேதி நடைபெறுகிறது. தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே தலைமையில் நடக்கும் இந்த விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையை திறந்துவைக்கிறார்.
உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம், முதல்வர் கருணாநிதி, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் இதற்கு உயர்நீதிமன்ற வக்கீல்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் கருணாநிதி விழாவுக்கு வரக் கூடாது, அவருடன் நீதிபதிகள் மேடையில் அமரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் ஏ.ஆர்.எம்பெருமாள் என்பவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதியை இந்த விழாவுக்கு நீதிபதிகள் அழைக்க கூடாது. அப்படி அழைத்தால் 23ம் தேதியில் இருந்து நான் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் வெளியிட்டள்ள அறிக்கையில்,
அம்பேத்கர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கக் கூடாது என்றும், கறுப்பு கொடி காட்டி கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தில் கூட்டம் கூட்டவில்லை. எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதல்வர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி எந்த விவாதமும் செய்யப்படவில்லை.
அரசியல் சாசன மேதை அம்பேத்கரின் திருவுருவ சிலை, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் அமைக்கப்படுவது மட்டும்தான் எங்களுடைய ஒரே நோக்கம். இந்த நிகழ்ச்சி, ஐகோர்ட்டு நீதிபதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.
அதுபோல், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம், முதல்வர் கலைஞர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற முடிவு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே தலைமையில் ஐகோர்ட் நீதிபதிகள் எடுத்த முடிவாகும்.
இந்த முடிவை சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கம் எதிர்க்கவில்லை. மாறாக அதை வரவேற்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் கூடி, சில கருத்துகளை பரிந்துரை மனுவாக கொடுத்தார்கள். அந்த பரிந்துரையை நாங்கள் ஏற்கவில்லை என்றார் பால் கனகராஜ்.
தலித் மாணவர்கள் கருணாநிதிக்கு ஆதரவு
இந்த நிலையில் வக்கீல்கள் விடுத்த எச்சரிக்கைக்கு தலித் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பல்வேறு எண்ணற்ற சலுகைகளை வாரிவழங்கி தாழ்த்தப்பட்ட சமுதாய பாதுகாவலனாக விளங்கி வருபவர் முதல்வர் கருணாநிதி. அதே போல், அம்பேத்கருக்கு பல சிறப்புகளை செய்தவரும் அவர் தான்.
அம்பேத்கர் நினைவை போற்றும் வகையில், இனி எத்தனை நூற்றாண்டு வந்தாலும், அவர் பெருமை குறையாத வகையில் தமிழ்நாட்டில் நினைவு சின்னங்களை எழுப்பி பெருமை சேர்த்தவரும் அவர் தான்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஒளி விளக்காக டாக்டர் அம்பேத்கர் விளங்கினார். இன்று அவரின் நம்பிக்கை நட்சத்திரமாக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார். அதே போல், நீதித்துறைக்கு என்று அதிக அளவு நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும் அவர் தான்.
தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவனாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் வகையிலும், அதற்கு ஏற்றார் போலும் தனது மகனுக்கு தாழ்த்தப்பட்ட இடத்தில் பெண்ணை எடுத்து மணம் முடித்து வைத்து அழகு பார்த்தவர் கருணாநிதி.
எனவே, அம்பேத்கரின் நினைவை என்றென்றும் போற்றி அகம் மகிழ்ந்து கொள்ளும் நாங்கள், கருணாநிதிக்கு எங்கள் மனதில் ஒரு இடத்தை கொடுத்துள்ளோம். எனவே, அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள முழு தகுதி படைத்தவர் கருணாநிதிதான். அவர் இல்லாத விழாவை எங்களால் கனவிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. கருணாநிதி இல்லாமல் அப்படிப்பட்ட திறப்பு விழா தேவை இல்லை.
எனவே, மிகவும் முழு மனதோடு அனைவரும் இந்த பெருமைமிகு அம்பேத்கார் சிலை திறப்பு விழாவிற்கு முதல்வர் கருணாநிதியை அழைத்து தகுந்த சிறப்பு அளிக்க வேண்டும். அப்போது, தான் தாழ்த்தப்பட்டோருக்காக அவர் ஆற்றிய சாதனைக்கு நாம் செய்யும் சிறு மரியாதையாக இது இருக்கும்.
இன்றைய மாணவர்களாகிய நாங்கள் நாளைய வக்கீல்கள். எனவே, இந்த தொழிலில் எங்கள் பெரிய அண்ணன்களாக விளங்கும் வக்கீல்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டால் தான் இந்த விழா களிப்புமிகு விழாவாக அமையும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications