6 மணிக்கு போன் வந்தால் அமைச்சர்கள் நடுங்குவோம்-பரிதி

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திருமங்களேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி கட்டிடம் கட்டப்படுவதாகவும், இதில் அரசு உத்தரவும் மீறப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு பி.கே.சேகர்பாபு (அதிமுக), ஞானசேகரன் (காங்கிரஸ்), வேல்முருகன் (பாமக), மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட் ) ஆகியோர் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
கோயிலுக்கு சொந்தமான நிலத்தை காப்பாற்ற வேண்டும் என்றும், அந்த இடத்தில் ஓசோன் குழுமம் கட்டுமான பணியை மேற்கொள்வதால் அந்த பகுதியை சேர்ந்த வீடுகள் அதிர்வதாகவும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பரிதி இளம்வழுதி,
வீட்டு வசதி துறை மானிய கோரிக்கை விவாதம் நடந்தபோது உறுப்பினர்கள் இதுபற்றி பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் அப்போது பேசாமல் இப்போது சிறப்பு கவனஈர்ப்பு பிரச்சனையாக கொண்டு வந்துள்ளீர்கள்.
இதுபற்றி உண்மை நிலையை தெரிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது குறித்து கடந்த ஆண்டு ஜூலை 16ந் தேதி சட்டசபையில் பிரச்சனை எழுப்பப்பட்டு தெளிவான பதிலை நான் கூறியிருந்தேன். ஆனால் ஒரு பத்திரிகையில் (தினமணி) கடந்த 19ம் தேதி அரசு உத்தரவு மீறப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
பொதுவாக காலையில் 6 மணிக்கு எங்கள் தொலைபேசி அலறுகிறது என்றால் அது முதலமைச்சரிடமிருந்து வந்த அழைப்பாகத்தான் இருக்கும் என்று அமைச்சர்களாகிய நாங்கள் நடுங்குவோம்.
கடந்த 19ம் தேதியும் 6 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. முதல்வராக இருக்குமோ என்று கருதி அதை நான் எடுத்தபோது துணை முதல்வர் பேசினார்.
பத்திரிகையில் வெளிவந்த செய்தியை பார்த்தீர்களா என்று என்னைக் கேட்டார். இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன்.
அந்த செய்தியை படித்துவிட்டு விளக்கங்களை வாங்கி தயாராக இருக்குமாறு துணை முதல்வர் கூறினார்.
நானும் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு விவரங்களை சேகரித்தேன். சென்ற ஆண்டு வெளியான செய்தியில் ரூ.120 கோடி பெருமானமுள்ள கோயிலுக்கு சொந்தமான நிலம் அபகரிப்பு, இதற்கு அரசு உடந்தை என்று செய்தி போடப்பட்டிருந்தது.
1.77 ஏக்கர் நிலம் ரூ.170 கோடி பெருமானதாக இருக்குமா என்று யாரும் சிந்திக்கவில்லை.
கிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 42 ஏக்கர் நிலம் விற்கப்பட்டுள்ளது. இதில் ஆலயத்துக்கு சொந்தமான 3.03 ஏக்கர் நிலமும் உள்ளடங்கியதாக இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
வழக்கு விசாரணையில் 3.03 ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே மத்திய பொதுப் பணித்துறைக்கு 1.26 ஏக்கர் நிலம் விற்கப்பட்டது தெரிய வந்தது. எனவே தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும், 3.03 ஏக்கரில் விற்றது போக மிச்சமுள்ள 1.77 ஏக்கர் நிலத்தில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்றும் இறுதி உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது.
இதன்படி 42 ஏக்கரில் மிச்சமுள்ள இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஓசோன் குழுமம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் விண்ணப்பித்தது. பல்வேறு மட்டங்களில் கூர்ந்து ஆய்வு செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இடத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என்ற நிபந்தனையுடன் சிஎம்டிஏ அனுமதி வழங்கியது.
மேலும் முறையான அனுமதியை சென்னை மாநகராட்சியிடம் பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அதைச்சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் ஓசோன் குழுமம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது அரசு உத்தரவு மீறப்படுகிறது என்று பத்திரிகை செய்தி கூறுகிறது. சட்டசபை நடக்கும்போதெல்லாம் இதுபோன்ற செய்திகள் வருவது இந்த அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் அளவுக்கு அந்த பத்திரிகைக்கு நிர்பந்தமோ, உள்நோக்கமோ இருக்கும் என்று நான் எண்ணவில்லை.
எனினும் இந்த செய்தி தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு மேலும் உறுப்பினர்கள் திருப்தியடையவில்ல என்றால் பிரச்சனை எழுப்பிய உறுப்பினர்களையும் சம்பந்தப்பட்ட பத்திரிகை செய்தியாளர்களையும் உங்கள் தலைமையில் அழைத்துச்சென்று உண்மையை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்.
உண்மையான தகவல்களையே வெளியிட வேண்டும் என்று பத்திரிகைகளை கேட்டுக் கொள்கிறேன் என்றார் பரிதி.












Click it and Unblock the Notifications