தேர்தல் செலவு கணக்கு: பாஜக, பாமகவுக்கு ஆணையம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த நாடாளுமன்றத் தேர்தல் செலவு கணக்கை சமர்பிக்காத பாஜக, பாமக உள்பட 15 கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரும் 29ம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்து 90 நாட்களுக்குள் அதில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்.

ஆனால், கடந்த மக்களவைத் தேர்தல் முடிந்து ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில் பாஜக, பாமக உள்ளிட்ட 15 கட்சிகள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை சமர்பிக்கவில்லை.

இதில் நாட்டின் முக்கிய எதிர்க் கட்சியான பாஜக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், அருணாச்சல் காங்கிரஸ், ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, மணிப்பூர் மக்கள் கட்சி, மிசோ தேசிய முன்னணி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, தேசிய மக்கள் கட்சி, மிஜோரம் தேசியவாத கட்சி,

மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி, புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆகியவை அடங்கும்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் இந்தக் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சொத்து கணக்கு-லாலுவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை:

இந் நிலையில் தனது சொத்து மதிப்பு விவரத்தை உடனே தெரிவிக்காவிட்டால், மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் மீரா குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவை எம்பிக்கள் பதவியேற்ற 90 நாட்களில் தங்கள் சொத்து மதிப்பு பட்டியலை, சபாநாயகரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால் பல எம்.பிக்கள் தங்கள் சொத்து மதிப்பு பட்டியலை தாக்கல் செய்யவில்லை.

இது குறித்து சபாநாயகர் மீரா குமார் மக்களவையில் கூறுகையில், அமைச்சர் ஆர்.பி.என்.சிங் மற்றும் முக்கிய தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், கல்யாண் சிங், பாபுலால் மராண்டி ஆகியோர் தங்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்யவில்லை.

அதே போல திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த தபாஸ் பால், சுயேச்சையான திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீபீந்தர் சிங் ஹோடா, இந்தர்ஜித் சிங், அவ்தார் சிங், சஞ்சய் சிங், தீபா தேஷ்முக், பொன்னம் பிரபாகர் மற்றும் பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த மொத்தம் 51 எம்.பிக்கள் தங்கள் சொத்துக் கணக்கை தரவில்லை.

கட்சியின் தலைவர்கள், தங்கள் கட்சியின் எம்.பிக்களை உடனே சொத்து விவரத்தை தாக்கல் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

சொத்து கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மீரா குமார்.

என்ஆர்ஐகளுக்கு வாக்குரிமை அளிப்பதில் சிக்கல்:

இந் நிலையில் இன்று சென்னை வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நாடாளுமன்றத் தேர்தல் செலவுக் கணக்குத் தொடர்பாக நாடு முழுவதும் 15 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதிக்குள் அந்தக் கட்சிகள் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய கெடு விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு சட்டத்தில் சில மாற்றங்கள் தேவை. தற்போதைய நடைமுறையில் சில பிரச்சனைகள் உள்ளன. அவர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பதால் இந்த சிக்கல் உள்ளது.

இதனால் இந்தக் குறைபாடுகளை களைவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேட்டதற்கு, அது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு அது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+