மாற்று திறனாளிகள் நலவாரிய குழு மாற்றி அமைப்பு
சென்னை: மாற்று திறனாளிகள் நல வாரியக் குழுவை திருத்தி அமைப்பு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுடைய முன்னேற்றத்தில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையிலிருந்து பிரித்து, தமது நேரடி கண்காணிப்பில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என்னும் ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ள முதல்வர் கருணாநிதி அத்துறைக்கு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் செயலாளராகவும் நியமனம் செய்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி மாற்றுத் திறனாளிகளிடம் கொண்டுள்ள அளவற்ற அன்பும் கருணையும் காரணமாக, அவர்களுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பை அளிக்கும் வகையில், அவர்களுக்கெனத்தனி நல வாரியம் ஒன்றினை 24.4.2007 அன்று ஏற்படுத்தி, அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக உதவித் தொகைகள் வழங்கி வருகிறார்.
இந்த மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மற்றும் அதன் அலுவல்சாரா உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிக்காலம் 23.4.2010 அன்று முடிவடைவதால், இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் குழுவைத் திருத்தியமைத்து முதல்வர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, முதல்வரின் தலைமயிலான இந்த நலவாரியத்தில் சமூக நலத்துறை அமைச்சர் அதன் துணைத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆலோசகராகவும், நிதித்துறை முதன்மைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலாளர் ஆகியோர் அலுவல்சார் உறுப்பினர்களாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளாக கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே. ரங்கநாதன், எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் எம்.பி. நிர்மல், எபிலிட்டி பவுண்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த நடிகை ரேவதி என்ற ஆஷா மேனன், லாரன்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த நடிகர் லாரன்ஸ் ராகவேந்திரா ஆகியோருடன் கமீலா நாசர்,
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதிகளாக பார்வையற்றோருக்கான இந்திய சங்கத்தின் நிறுவனர் எஸ்.எம்.ஏ. ஜின்னா, திமுக பார்வையற்றோர் நற்பணி மன்றச் செயலாளர் நா. கருணாநிதி ஆகியோருடன் எம்.சி. கோமகன், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதிகளாக சிறுமலர் காது கேளாதோருக்கான பள்ளியைச் சேர்ந்த டாக்டர் சகோதரி ரீட்டாமேரி,
பால வித்யாலயா செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கான மையத்தின் கெளரவ இயக்குநர் சரஸ்வதி நாராயண சாமி, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் சிம்ம சந்திரன், துணைத்தலைவர் தீபக் ஆகியோருடன் சென்னை ரெ. தங்கம், கி. கோபிநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதியாக ஆயக்குடி அமர்சேவா சங்கத்தைச் சேர்ந்த எஸ். ராமகிருஷ்ணன். மனநோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதியாக மதுரை டாக்டர் சி. ராமசுப்பிரமணியம் ஆகியோர் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்களாகவும் அவர்கள் பொறுப்பேற்கும் நாள் முதல் 3 ஆண்டு காலத்திற்குச் செயல்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பாம்பு கடித்து உயிரிழந்த சிறுவன்-ரூ.50,000 உதவி:
இந் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அ.வெள்ளேடு கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா அருள்ராணியின் 14 வயது மகன் சேவியர் அருள்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் பாம்பு கடித்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்தார்.
இது குறித்து திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி வாயிலாகத் தமது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்த முதல்வர் கருணாநிதி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தார்க்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அக்குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 நிதியுதவி வழங்கிட இன்று ஆணையிட்டதாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு:
இந் நிலையில் இன்று தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மரியதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் சந்திப்பு:
அத் போல முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் தமிழக அரசின் சார்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிர் ஏ.ஆர்.லட்சுமணன் மரியாதை நிமித்தமாக இன்று தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.












Click it and Unblock the Notifications