சானியா திருமண வரவேற்புக்காக ஆடம்பர மின் விளக்கு அலங்காரம்- சோயப் வீட்டில் ரெய்ட்
சியால்கோட்: சானியா மிர்ஸாவின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் குடும்பத்தினருக்குச் சொந்தமான வீட்டில் திருமண வரவேற்பு தொடர்பாக பெருமளவில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ரெய்டு நடந்துள்ளது.
யபாகிஸ்தான் குடிநீர் மற்றும் மின்சார வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் சியோல்கோட்டில் உள்ள சோயப்பின் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது.
இந்த ரெய்டுக்குக் காரணம், சானியா, சோயப் திருமண வரவேற்புக்காக வீட்டில் செய்யப்பட்டிருந்த மின் விளக்கு அலங்காரங்கள்தான்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாலிக்கின் குடும்பத்தினர் யாரும் பெரும் பொருட் செலவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யக் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். நாடே மின் பற்றாக்குறையால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதால் இதைத் தவிர்க்குமாறு கேட்டிருந்தோம்.
ஆனால் அதையும் மீறி மின்சாரம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தேவையற்றது. எங்களது அதிகாரிகள் குழு அங்கு சென்று சோதனை நடத்தி தேவையில்லாத ஆடம்பர மின் விளக்குகளை அகற்றுமாறு கூறினோம் என்றனர்.
பாகிஸ்தானில் பெரும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பாகிஸ்தான் அரசு பல்வேறு சேமிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்யாண மண்டபங்களில் அதிகபட்சம் 3 மணி நேரம் மட்டுமே மின் விளக்கு அலங்காரம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்து.
மேலும் அங்கு அரசு அலுவலகங்கள் வாரம் ஐந்து முறை மட்டுமே பணியாற்ற வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சோயப்பின் இந்திய விசா ஒரு வருடம் நீட்டிப்பு:
இந் நிலையில் சோயப் மாலிக்குக்கு ஒரு வருட கால விசா நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கணவருடன் பாகிஸதான் சென்றுள்ளார் சானியா மிர்ஸா. அங்கு அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தது. இதையடுத்து நேற்று சானியாவும், சோயப்பும் சேர்ந்து இந்தியத் தூதர் சரத் சபர்வாலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் சந்தித்தனர்.
அப்போது சோயப்பின் விசாவை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சோய்ப்பின் விசா ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் வருகிற ஜூன் மாதம் 24ம் தேதி வரைதான் சோயப்புக்கு விசா கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்தியாவின் டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் சோயப் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சானியா, சோயப் தம்பதியுடன் சானியாவின் தாயார் நசீமா மிர்ஸாவும் உடன் சென்றிருந்தார்.
இந்த சந்திப்பின்போது மணமக்களுக்கு தூதர் சபர்வால் வாழ்த்து தெரிவித்துக் கொண்டதாக இநதிய தூதரக செய்தித்தொடர்பாளர் சித்தார்த் சுத்சி தெரிவித்தார்.
இருப்பினும் சானியா, சோயப் தம்பதிக்கு விருந்து எதையும் தூதர் சபர்வால் ஏற்பாடு செய்யவில்லை என்றும் சுத்சி தரிவித்தார்.












Click it and Unblock the Notifications