உங்கள் பிரச்சனை என்ன?-அழகிரிக்கு மீரா குமார் கேள்வி
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு வராத காரணம் தொடர்பாக தன்னைச் சந்திக்குமாறு மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரியிடம் மக்களவை சபாநாயகர் மீரா குமார் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழில் பேச மீரா குமாரிடம் அமைச்சர் அழகிரி அனுமதி கோரியிருந்தார். அது பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் கூறி வருகிறார்.
இந் நிலையில் அழகிரி ஏன் நாடாளுமன்றத்துக்கே வருவதில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய மீரா குமார், என்னை வந்து சந்திக்குமாறு மத்திய அமைச்சர் அழகிரிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. என்னை சந்திக்கும்போது அவருடைய பிரச்சனை குறித்து என்னுடன் விவாதிக்கலாம். அவைக்கு வராத காரணம் குறித்தும் என்னுடன் அவர் பேசலாம் என்றார்.
ரசாயனத்துறை தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறையின் இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதில் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மக்களவையில் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டபோது பேசிய மீராகுமார், அழகிரி எங்கே இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவர் வெளிநாடு செல்வது தொடர்பாக அவைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications