அடுத்து ஜெயலலிதா ஆட்சி-ஆய்வில் தெரிய வருகிறது என்கிறது அதிமுக
மதுரை: தமிழகத்தில் அடுத்து ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையும் என்று ஆய்வில் தெரிய வருவதாக அதிமுக எம்பி மலைச்சாமி கூறினார்.
திருமங்கலம் நகர அதிமுக சார்பில் தேவர் சிலை முன் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய அதிமுக எம்பி மலைச்சாமி,
திருமங்கலம் இடைத்தேர்தலில் நான் பணியாற்றி உங்களிடம் அறிமுகம் ஆனவன்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் நாட்டில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் இருக்க வேண்டும். அமைதி வேண்டுமானால் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டு்ம். இருக்கிறதா?, இல்லை.
புரட்சித் தலைவி அவர்கள் மிகச் சிறந்த அரசியல்வாதி. நிர்வாகி, நல்லாட்சியை கொடுத்தார். திமுக ஆட்சியில் தமிழகத்தில் விலை ஏற்றம், வேலையில்லா திண்டாட்டம், கடுமையான மின்வெட்டு. ஆனால், சென்னையில் மட்டும் மின்வெட்டு இல்லை.
அதிமுக என்பது மாபெரும் இயக்கம். ஒரு ஓட்டு வங்கி இயக்கம். திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சி ஓட்டுகளை கவனித்தால் முதலில் இருப்பது அதிமுக தான்.
எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இருக்கிறார்கள். இரட்டை இலை உள்ளது. கடந்த தேர்தல்களில் பணநாயகம் ஜெயித்தது. ஜனநாயகம் ஜெயிக்கவில்லை.
தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்ற நிலை உருவாகி விட்டது. அதிமுக தொண்டர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அடுத்த ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமையும் என ஆய்வில் தெரிகிறது.
மக்களுக்கு எதையும் செய்யாத ஆட்சியை, ஊழல் ஆட்சியை பார்த்து இனியும் பொறுக்க மாட்டார்கள் என்றார் மலைச்சாமி.
ஆனால், எந்த 'ஆய்வு' என்பதை சொல்லவில்லை.
சட்டசபையா சர்க்கஸ் கூடாரமா?:
இதற்கிடையே, புதிய சட்டசபை சர்க்கஸ் கூடாரம் போல இருப்பதாக அதிமுக மேலூர் தொகுதி எம்எல்ஏ சாமி கிண்டலடித்தார்.
சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கைகள் மீது பேசிய சாமி,
மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம், 2006-07 முதல் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன், திட்ட மதிப்பீடும் உயர்ந்தபடி இருக்கிறது. ஆனால், இதுவரை திட்டத்தை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல நகராட்சிகளில் கமிஷனர்கள் இல்லை. இப்படியிருந்தால் நிர்வாகம் எப்படி நடக்கும்?.
கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளில் 2,500 பேர் மட்டுமே வேலை பார்க்கிறார்கள் என்றும், ஆனால், 10,000 பேர் வேலை பார்ப்பதாக கணக்கு காட்டி கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 120 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
போலி போலீஸ் அதிகாரிகள், போலி பாஸ்போர்ட், போலி சாமியார்கள், போலி மதுபானம், போலி டாக்டர்கள் என எங்கு பார்த்தாலும் ஒரே போலியாக உள்ளது.
சட்டசபையைப் பார்த்தால் நாடக கொட்டகையைப் போலவும் சர்க்கஸ் கூடாரம் போலவும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் துணிகள் தொங்க விடப்பட்டுள்ளன.
சர்க்கஸ் நிகழ்ச்சியில் சுற்றி, சுற்றி பைக் ஓட்டுவது போன்ற அமைப்பு எல்லாம் இங்கு இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications