ரவுடியால் கொல்லப்பட்ட ஏட்டு குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம்-ஸ்டாலின்
சென்னை: விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே ரவுடியால் கொல்லப்பட்ட தலைமைக் காவலர் நாகரத்தினம் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் நாகரத்தினம் என்ற முதுநிலை காவலர் ரவுடி குமார் என்பவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி, ரேணிகுண்டா, சுப்பிரமணியபுரம் போன்ற திரைப்படங்களில் வருவதை விடவும் மிகக் கொடூரமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
காவல் துறையினரை ரவுடிகள் வெட்டிக் கொல்லும் நிலை உருவாகியுள்ளது. சமூகத்தில் இவர்களை வளர விடக்கூடாது. 'காக்க காக்க' போன்ற திரைப்படங்களில் வருவது போல எண்கெளண்டர்களும் தமிழ்நாட்டில் அதிகமாகி வருகிறது. அதனையும் தடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்,
கடந்த 27ம் தேதி சில கட்சிகள் அறிவித்த முழு அடைப்பின்போது, விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டியில் கோவில் திருவிழாவில் முதல்நிலை காவலர் நாகரத்தினம் ஈடுபட்டிருந்தபோது, குமார் என்பரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
குமாரை ஒரு வழக்கு தொடர்பாக அவரது வீட்டிற்கு தேடி சென்றதால், ஆத்திரமடைந்த அவர் இந்த கொலையை செய்திருக்கிறார்.
குமாரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, குமார் காவல்துறையினரை தாக்க முயற்சி செய்தார். அப்போது தாக்குதலில் இருந்து தப்பிக்க காவல்துறையினர் சுட்டத்தில் குமார் இறந்தார்.
கொலை செய்யப்பட்ட நாகரத்தினம் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.
உறுப்பினர் பாலபாரதி எந்த அளவுக்கு ஆர்வத்துடன் சினிமா பார்ப்பார் என்பதை அவருடைய பேச்சு மூலம் தெரிகிறது.
தமிழக காவல்துறை முதல்வர் கருணாநிதியின் தலைமையில் செயல்படுகிறது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் உரிய நேரத்தில், உரிய முறையில் எடுக்கப்படும் எனறார்.












Click it and Unblock the Notifications