மின் கட்டணம் உயராது: முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயராது, இலவச மின்சாரமும் ரத்தாகாது என்று முதல்வர் கருணாநிதி இன்று மீண்டும் சட்டசபையில் தெரிவித்தார்.

மின்துறை மானியக் கோரிக்கை மீது நேற்று சட்டசபையில் விவாதம் நடந்தது. அதன் விவரம்:

கலிவரதன் (பா.ம.க.): விவசாயிகளுக்கு 6 மணி நேரம் மின்சாரம் கிடைப்பதில்லை. இடையில் 10 முறை மின்வெட்டு. இதனால் விவசாயம் பாதிக்கிறது. வீட்டு மின் இணைப்பு விண்ணப்பம் செய்த அன்றே வழங்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. கேட்டால் தளவாட சாமான்கள் இல்லை, மீட்டர் இல்லை என்று சொல்லப்படுகிறது.

நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு): அறிவிக்கப்படாத மின்வெட்டும் இருக்கிறது. மின் பராமரிப்பு பணி என்று கூறி கூடுதல் நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் உள்நாட்டு நிறுவனங்கள் இந்த உள்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2011-ல் பலன் கிடைக்கும் என்று அறிவிப்பு வருகிறது. அதுவரை காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கம் மக்களிடம் உள்ளது.

பத்மாவதி (இந்திய கம்யூனிஸ்டு): தமிழ்நாட்டில் மின் கட்டணங்களை உயர்த்துவதற்கு மின்வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இலவச மின்சாரமும் நிறுத்தப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்வர் கருணாநிதி: உறுப்பினர் பத்மாவதி மின் கட்டணத்தை உயர்த்தப் போவதாகவும், இலவச மின்சாரத்தை நிறுத்தப் போவதாகவும் கூறியுள்ளார். இது உண்மையல்ல. மின் கட்டணத்தையும் உயர்த்தப் போவதில்லை. இலவச மின்சாரத்தை நிறுத்தப் போவதுமில்லை. இதற்காக போராட்டம் நடத்தலாம் என்ற அவரது கனவு பலிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஆட்சியில் எப்போதும் உபரி மின்சாரம்-அதிமுக

முன்னதாக தமிழகத்தில் நிலவம் மின் பற்றாக்குறை தொடர்பாக சட்டசபையில் அமைச்சர்களுக்கும் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் இடையே மிக காரசார வாக்குவாதம் நடந்தது. அதன் விவரம்:

நத்தம் விஸ்வநாதன் (அதிமுக): புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எப்போது ஆட்சியில் இருந்தாலும் அப்போதெல்லாம் தமிழகத்தில் உபரி மின்சாரத்தை வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்தார்.

ஆனால், எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் வெட்டும் சேர்ந்தே வருகிறது. அதிமுக ஆட்சியில் மிகை மின் உற்பத்தி மாநிலமாக தமிழகம் இருந்தது. இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக மின் பற்றாக்குறை உருவெடுத்துள்ளது. மின் வெட்டால் மக்களை வேதனையில் ஆழ்த்தியதுதான் திமுக அரசின் சாதனை.

மின்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 15,800 மெகாவாட் என்று கூறப்பட்டுள்ளது. மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலமாக பெறப்படும் மின்சாரத்தை மொத்த நிறுவு திறனில் சேர்ப்பதில்லை. இது மரபாகக் கடைபிடிக்கப்படுகிறது. சென்ற ஆண்டும் இந்த தவறை நான் சுட்டிக்காட்டினேன். இந்த ஆண்டு மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 10,214 மெகாவாட் மட்டுமே.

ஆனால், அரசின் இயலாமையை மறைப்பதற்காக மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலம் பெறப்படும் மின்சாரத்தையும் சேர்த்து மொத்த நிறுவுத் திறனை அதிகரித்துக் காட்டியுள்ளீர்கள். உண்மை சாதுர்யமாக மறைக்கப்பட்டுள்ளது.

கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் மிகப்பெரிய அளவில் முரண்பாடுகள் உள்ளன. 2007-08ம் ஆண்டு மின்சாரத் துறையில் வருவாய் பற்றாக்குறை ரூ. 3,497.62 கோடி என்று அந்த ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், 2010-11 கொள்கை விளக்கக் குறிப்பில் 2007-08க்கான வருவாய் பற்றாக்குறை ரூ. 3,693.04 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல, 2008-09ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 6,449.54 கோடி என்று அந்த ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், 2010-11 கொள்கை விளக்கக் குறிப்பில் 2007-08க்கான வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 7,131.94 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதில் எந்த புள்ளி விவரத்தை நம்புவது? ஏன் இந்த முரண்பாடுகள்? ஏன் இந்த தடுமாற்றம்?

ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியில் 40 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்களை திமுக அரசு தீட்டி வருகிறது. அதன் மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதற்கும் மின்சாரம் வழங்குவோம் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இந்த பேரவையிலேயே அறிவித்தார். 40 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்வோம் என்று அறிவித்த நீங்கள் 400 மெகாவாட் கூட உற்பத்தி செய்யவில்லை.

கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் வெறும் 203 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அறிவித்த திட்டங்கள் எல்லாம் வெற்று அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

ஏன் மின் பற்றாக்குறை என்று கேட்டால் அதிமுக ஆட்சியில் மின் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதையே கூறி வருகிறீர்கள். முன்பு அமைச்சர் ஆற்காடு வீராசாமி மட்டும் இதனை கூறிவந்தார். இப்போது முதல்வரும் பேச ஆரம்பித்துள்ளார். அப்படியெனில் 4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்: அதிமுக உறுப்பினர் இங்கு பேசியபோது 2001ம் ஆண்டு முதல் 2006 வரை மின்சார உற்பத்தி செய்யவில்லை என்பதை ஒத்துக்கொண்டதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் 2006ம் ஆண்டு முதல் 2010 வரை 4 ஆண்டுகாலம் ஏன் மின்சார உற்பத்தி செய்யவில்லை என்று கேட்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டிலிருந்து அதற்கான பலன் கிடைக்கும்.

நத்தம் விஸ்வநாதன் (அதிமுக): 1991-96 அதிமுக ஆட்சியில் 1,300 மெகாவாட் மின்சாரமும், 2001-06 அதிமுக ஆட்சியில் 2,047 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டன. 1996-2001 திமுக ஆட்சியில் 560 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன்: ஒரு ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்படும் திட்டங்கள் அந்த ஆட்சியிலேயே நிறைவேற்றப்படும் என்று சொல்ல முடியாது. அணைகள் கட்டுதல், மின் திட்டங்கள் ஆகியவைகளுக்கு காலதாமதம் ஏற்படும். நாகை மாவட்டம் பிள்ளைபெருமாள் நல்லூர் மின் உற்பத்தி திட்டத்துக்கு 1992 அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பின்பு மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். அந்தத் திட்டத்தை தொட்டுக்கூட பார்க்கவில்லை.

1998ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தான் வேலை தொடங்கியது. வேலை தொடங்கிய பிறகு 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திட்டத்தை நாங்கள் முடித்தபிறகு மின்சாரத்தை நீங்கள் கொடுத்தீர்கள்.

இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி: குரூப் குரூப்பாக ஏழுந்து ஏன் சத்தம் போடுகின்றீர்கள். இது போன்ற செயலை விட்டுவிடுங்கள்.

ஜெயக்குமார் (அதிமுக): எம்.ஜி.ஆர். தான் முதல் முதலாக சிறு குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தினார்.

அமைச்சர் பொன்முடி: எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று நாராயணசாமி சென்னைக்கு வந்தபோது அவர்களை எல்லாம் விரட்டி அடித்தது தமிழக மக்களுக்கு தெரியும். கட்டணத்தை குறைக்க முடியாது என்று சொன்னவர்கள் இலவச மின்சாரம் கொடுத்தோம் என்று கூறுவது தவறானது.

நத்தம் விஸ்வநாதன் (அதிமுக): திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை, அனல் மின் நிலையஙக்ளை பராமரிக்காதது ஆகியவையே மின் பற்றாக்குறைக்கு காரணம். அனல் மின் நிலையங்களுக்கு தரமற்ற நிலக்கரியை அதிக விலைக்கு இறக்குமதி செய்ததால் மின் வாரியத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெளிச்சந்தை மதிப்பைவிட ஒரு டன்னுக்கு 20 அமெரிக்க டாலர் அதிகம் கொடுத்து நிலக்கரியை மின் வாரியம் இறக்குமதி செய்துள்ளது என்றார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

இந் நிலையில் இன்று மின் கட்டணம் தொடர்பாக மீண்டும் சட்டசபையில் விவகாரம் கிளப்பப்பட்டது.

மின்சாரத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பத்மாவதி, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பதாகவும், இலவச மின்சாரத்தை ரத்து செய்ய இருப்பதாகவும் அறிகிறோம். இதனால் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, மின்சார கட்டணத்தை உயர்த்த ப்போவதாகவும் இலவச மின்சாரத்தை நிறுத்த ப்போவதாகவும் உறுப்பினர் பத்மாவதி கூறுவது முழுக் கற்பனையாகும். தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தப் போவதும் இல்லை, இலவச மின்சாரத்தை நிறுத்தப் போவதும் இல்லை. இதனைக் காரணம் காட்டி போராடலாம் என்ற கனவு பலிக்காது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+