எம்.பிக்களின் ஊதியத்தை 5 மடங்கு உயர்த்த முடிவு!
டெல்லி: நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.16,000 ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர நாடாளுமன்றக் குழு கூட்டங்களில் கலந்து கொள்ளவும், தொகுதிகளுக்கு சென்று வரவும் தனியாக நிதி தரப்படுகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் வரை எம்பிக்களுக்குக் கிடைக்கிறது.
இதைத் தவர தொலைபேசி செலவாகவும், அலுவலக செலவாகவும், ஊழியர்கள்-உதவியாளர் செலவாகவும் ரூ. 40,000 வரை பல அலவன்சுகளும் வழங்கப்படுகின்றன.
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பளம் உயர்த்தப்பட்டது. அதேபோல தங்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல தங்களுக்கும் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் இந்த ஊதிய உயரவை அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து எம்.பிக்கள் ஊதியத்தை உயர்த்துவது குறித்து ஆராய காங்கிரஸ் எம்.பி சரன்தாஸ் மகந்த் தலைமையில் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தனது அறிக்கையை மக்களவை சபாநாயகர் மீராகுமார், மாநிலங்களவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரி ஆகியோரிடம் தாக்கல் செய்தது.
அதில் எம்.பிக்களி்ன் ஊதியததை 5 மடங்க உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் அலவன்ஸ் தொகையை ரூ. 40,000ல் இருந்து ரூ. 80,000 ஆக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி எம்.பிக்களின் மாத ஊதியத்தை ரூ.16,000ல் இருந்து ரூ.80,000 ஆகவும், அலவன்ஸ் தொகையை ரூ.80,000 ஆகவும் உயர்த்தி எம்.பிக்களுக்கு மாதம் ரூ.1.6 லட்சம் கிடைக்கச் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கூடுதலாக ரூ.170 கோடி வரை செலவாகும்.
இந்த ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் பெற நிதி அமைச்சகத்திடமும் இந்த அறிக்கை தரப்பட்டுவிடடது.
இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு:
ஆனால், இந்த ஊதிய-அலவன்ஸ் உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அரசுப் பணியாளர்கள் போல எம்.பிக்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று இடதுசாரித் தலைவர்களான குருதாஸ் தாஸ்குப்தா, டி.ராஜா உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.
இதையடுத்து இந்த ஊதிய உயர்வை அமலாக்குவதை மத்திய அரசு ஒத்தி வைத்துவிட்டது.
அதே நேரத்தில் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத் தொடர் தொடங்கும் முன் இந்த பரிந்துரை குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எம்பிக்களிடம் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications