ஜெயலலிதாவின் பாதுகாப்பு-ஸ்டாலின் விளக்கம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளிக்கையில் ஸ்டாலி்ன் கூறியது:
6.4.1995ல் பேசிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது குற்றம் நடக்காமல் உள்ளதா? குற்றங்களை நடைபெறாத நாடு உலகில் கிடையாது. தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதேசமயம் கண்டுபிடித்த குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார்.
ஆகவே, 2008ல் நடைபெற்ற கொலைகள் 1630. அதில் 1,526 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள் 94 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2009ம் ஆண்டில் 1,644 கொலைகள், அதிலே 1,562 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். 95 சதவீகிதம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் கருத்துபடி நியாயமாக அதிமுக உறுப்பினர்கள் இந்த அரசை பாராட்ட வேண்டும்.
ஜெயலலிதாவின் பாதுகாப்பு:
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் அவரது மெய்க்காப்பாளர்களாக 2 எஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
அவர்களுக்கு 9 எம்.எம். ரக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் மெய்க்காவல் பணியில் 3 ஏட்டுகள் தொடர்ந்து பணியில் உள்ளனர்.
ஜெயலலிதாவின் இல்லப் பாதுகாப்புக்கு 10 பேர் அடங்கிய காவல் துறையினர் தானியங்கி துப்பாக்கிகளோடு பாதுகாப்புப் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர்.
வழிக்காவல் பாதுகாப்புக்காக இரண்டு வாகனங்களோடு பொலிரோ ரக ஜீப்பும், அம்பாசிடர் காரும், 24 காவல் அலுவலர்கள் 8 மணி ஷிப்டுகளாக நாள் முழுவதும் 3 சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேலும் 12 தேசிய பாதுகாப்புப் படையினர் 2 அம்பாசிடர் கார் வாகனங்களில் வழிக்காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பார்வையாளர்களைச் சோதனை செய்வதற்கான பணியில் 3 காவலர்கள், 2 பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா சிறுதாவூர் மற்றும் கொடநாடு இல்லத்தில் தங்குகின்ற காலத்தில் போயஸ் தோட்ட இல்லத்தில் 10 பேர் அடங்கிய பாதுகாப்பு அலுவலர்கள், பாதுகாப்புக் காவலர்கள் பணியில் உள்ளனர் என்றார் மு.க.ஸ்டாலின்.


Click it and Unblock the Notifications
