ரஞ்சிதாவுக்காக வீதியில் இறங்கிப் போராடுவோம்! - பெண் வழக்கறிஞர்
சென்னை: நடிகை ரஞ்சிதாவை போலீசார் அசிங்கப்படுத்துகிறார்கள். அவர் பாதிக்கப்பட்ட பெண். பக்குவமாகக் கையாள வேண்டும். இல்லையேல் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று பெண் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அறிவித்துள்ளார்.
சுதா ராமலிங்கம் மகளிர் அமைப்புகளில் தீவிரமாக உள்ளவர். நடிகை ரஞ்சிதா இவரது பாதுகாப்பில் சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் போலீசார் சுதா ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் போலீசாரை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுபற்றி சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, "நடிகை ரஞ்சிதா பற்றி போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. என்னிடம் தொடர்பு கொண்டு பேசவும் இல்லை.
ஆனால் ரஞ்சிதா மீது எனக்கு அனுதாபம் உள்ளது. அவரைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கிறார். அவரை மேலும் அசிங்கப்படுத்தக் கூடாது என்பதே என் விருப்பம்.
ரஞ்சிதா தப்பி ஓடப் பார்க்கிறார் என்று செய்திகள் வந்துள்ளன. அவர் தப்பி ஓட முயற்சிக்கவில்லை. பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை முறைப்படி கையாள வேண்டும். அநாவசியமான கருத்துக்களைப் பரப்பக்கூடாது.
ரஞ்சிதா குற்றம் செய்தாரா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் நிரூபிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை. ரஞ்சிதா பற்றி அவதூறுகள் வெளி வருகின்றன.
நடிகை என்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது சரியல்ல. ரஞ்சிதா விஷயத்தில் பெண் உரிமை அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். பெண்களை போதைப் பொருளாக பயன்படுத்துவதை எதிர்த்து இப் போராட்டம் நடைபெறும் என்றார்.


Click it and Unblock the Notifications
