Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'லைலா' புயல் நெருங்குகிறது-நாளை கரையைக் கடக்கும்: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள லைலா புயல் சென்னைக்கு வெகு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை உள்பட வட மாவட்ட கடலோரப் பகுதிகளில் கன மழை மழை பெய்து வருகிறது. இந்தப் புயல் நாளை ஆந்திராவில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லைலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், மேற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் சென்னைக்குக் கிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு 300 கி.மீ தொலைவிலும் விசாகப்பட்டனத்துக்கு 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது இன்று மாலை 6 மணி நிலவரமாகும்.

நெல்லூர்-மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்கும்:

இது மேலும் வடக்கு மேற்காக வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவின் ஓங்கோல் மற்றும் விசாகப்பட்டனத்துக்கு இடையே நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அது திசை திரும்பியுள்ளதால் நாளை நெல்லூர்-மசூலிப்பட்டிணம் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று மாலை நிலரபப்படி அது நெல்லூர்-காக்கிநாடா இடையே மசூலிப்பட்டினத்துக்கு அருகே நாளை காலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு மற்றும் கடலோர தமிழகத்தின் கடலோலரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும். மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த சூறைக் காற்று வீசும். இது படிப்படியாக அதிகரித்து மணிக்கு 125 கிலோமீ்ட்டராக அதிகரிக்கக் கூடு்ம்.

கடல் கடும் சீற்றத்துடைது காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் விடிய விடிய மழை:

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டனம், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.

இன்று காலை முதலும் மழை விடாமல் தொடர்ந்து பெய்து வருகிறது.

மழை காரணமாக சென்னை நகரின் பல சாலைகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. கடும் வெயில் அடித்து வந்த நிலையில் வந்த இந்த திடீர் மழையால் சென்னை நகரமே குளிர்ந்து போயுள்ளது.

ஆனால், பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்துவிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக சில இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீ்ர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி உள்ளிட்ட புற நகர்ப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு தத்தளித்து வருகின்றன. மின்சாரமும் தடைபட்டுவிட்டதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் தரமணி, சாந்தோம், எம்.ஆர்.நகர் போன்ற பகுதிகளிலும் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே பாலத்தின் கீழ் வெள்ளம் சூழ்ந்தது. இடுப்பளவு அளவு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். இந்த பணி தாமதமாக மேற்கொண்டதால் மழை நீர் பெருமளவில் தேங்கி விட்டது.

திருவொற்றியூர், எண்ணூர், எர்ணாவூர் பகுதிகளில் புயல் சின்னம் காரணமாக நேற்று மாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

எண்ணூர் காட்டுக்குப்பம், காமராஜர் நகர், நேரு நகர் கமலா நகர் திலகர் நகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கூரைகள் சூறாவளி காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மாடி வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. பல இடங்களில் வீடுகளில் உள்ள ஓடுகள் காற்றில் பறந்தன.

வீடுகள் சேதமடைந்ததால் இப் பகுதி மக்கள் கோயில்களிலும் சமுதாய கூடங்களிலும் தஞ்சமடைநதுள்ளனர்.

திருவாரூர், ராமேஸ்வரம், தஞ்சை, நாகை மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. 40க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

புதுச்சேரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. அதே போல திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழை கன மழை பெய்து வருகிறது.

புயல் கரையை நெருங்கும்போது, மழை, புயல் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

154 மீனவர்கள் மாயம்:

இந் நிலையில் ஆந்திராவில் 50 படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை.

அதே போல தமிழத்தில் கடலூரில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடலூர் தேவானம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (60), ஆனந்த் (26), பூபாலன் (28) ஆகியோர் ஒரு படகிலும், சுனாமி நகரைச் சேர்ந்த சகாயராஜா இன்னொரு படகிலும் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் இன்று காலையில் கரை திரும்பியிருக்க வேண்டும், ஆனால் இதுவரை கரை திரும்பவில்லை.

இவர்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

உஷார் நிலையில் ஆந்திரா:

லைலா புயல் நாளை அதிகாலையில் கரையைக்கடக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கடலோர ஆந்திரா முழுவதும் முழுஉஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

புயல் நெருங்கி வருவதால் மிக பலத்த மழையும், மிக பலத்த சூறைக் காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தப் புயலால் நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு மற்றும் கோதாவரி, விசாகப்பட்டினத்தில் மிகுந்த சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடலோர ஆந்திரா முழுவதும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்புப் படையினரும், காவல்துறையினர் உள்ளிட்டோரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம்-ஒரிஸ்ஸாவுக்கும் எச்சரிக்கை:

இந்தப் புயல் சின்னம் வடக்கு நோக்கி நகரும்போது ஒரிஸ்ஸா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளிலும் 55 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசவும், அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலை கண்காணிக்கும் 'கல்பனா' செயற்கை கோள்:

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), வானிலை ஆய்வுக்காக 'மெட்சாட் 1' என்ற முதல் செயற்கை கோளை கடந்த 2002ம் ஆண்டு செலுத்தியது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, விண்வெளிக் கலன் விபத்தில் காலமானதையடுத்து இந்த செயற்கைக்கோளுக்கு 'கல்பனா 1' என்று பெயர் சூட்டப்பட்டது.

இப்போது தமிழகம்-ஆந்திராவை அச்சுறுத்தி வரும் 'லைலா' புயலின் போக்கு இந்த செயற்கைகோள் தான் கண்காணித்து, படங்களை அனுப்பி வருகிறது.

இலங்கையிலும் கனமழை- வெற்றிவிழா ரத்து:

இந் நிலையில் லைலா புயல் காரணமாக இலங்கையிலும் கன மழை பெய்து வருகிறது.​ இதனால் கொழும்பு நகரையும் அதை ஒட்டிய 5 மாவட்டங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.​

கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த போர் வீரர்கள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியும், 20ம் தேதி ​ காலியில் நடைபெறுவதாக இருந்த விடுதலைப் புலிகளை ஒடுக்கியதைக் கொண்டாடும் வெற்றி விழாவும் இந்த கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+