மங்களூர் விமான நிலைய ரன்வே உள்பட எதிலும் தவறு இல்லை-பிரபுல்
மங்களூர்: மங்களூர், பாஜ்பே விமான நிலையத்தில் இன்று காலை ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சமயத்தில், ரன்வே, பைலட்டுகள், பார்வை தூரம், விமானக் கட்டுப்பாட்டு மையம் என அனைத்து அம்சங்களிலும் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.
விமான விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரபுல் படேல் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விபத்தைப் பொறுத்தமட்டில், ரன்வே நன்றாக இருந்துள்ளது. விமானக் கட்டுப்பாட்டு அறையும் சரியாகவே செயல்பட்டுள்ளது. விமானிகளும் எந்தவிதமான நெருக்கடி ஏற்பட்டதாக தகவல் அனுப்பவில்லை.
ரன்வேயின் பார்வை தூரமும் சிறப்பாகவே இருந்துள்ளது. விமானம் தரையிறங்கியபோது மழை பெய்ததாக கூறப்படுவது தவறு, அப்போது மழை பெய்யவில்லை.
சம்பந்தப்பட்ட விமானம் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புதான் வாங்கப்பட்டது. அதேபோல ரன்வேயும் சிறப்பானது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சான்று அளித்துள்ளது. விமானமும் நல்ல நிலையிலேயே இருந்துள்ளது.
விமான ரன்வேயின் ஸ்பில்ஓவர் பகுதி 90 மீட்டர்களாகும். விமானம் தரையிறங்கி விபத்துக்குள்ளான பின்னர் கிட்டத்தட்ட 200 முதல் 300 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. மேலும், உடனடியாக அது தீப்பிடிக்கவில்லை.
விமானத்தின் ஒரு பக்க இறக்கை, கான்க்ரீட் லோகலைசர் சாதனத்தை உடைத்துக் கொண்டு அறுந்து கீழே விழுந்துள்ளது.
விமானத்தின் பைலட்டும் சரி, இணை பைலட்டும் சரி இதே விமான நிலையத்திற்கு பலமுறை வந்து சென்றுள்ளனர். விமான நிலையம் அவர்களுக்குப் புதிதல்ல. மேலும் இருவரும் நீண்ட தூரம் விமானம் ஓட்டிய அனுபவசாலிகளும் கூட.
தரையிறங்கியபோது குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி இறங்கிய விமானம் வேகமாக ஓடி விழுந்துள்ளது. ஸ்பில்ஓவர் பகுதி மிகவும் குறைவாக இருந்ததால்தான் விபத்து நேரிட்டுள்ளது.
மங்களூர் விமானநிலைய ரன்வேயில் எந்தக் குறையும் இருப்பதாக தெரியவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து இப்போதைக்கு துல்லியமாக கூற முடியாது. விசாரணை முடிவடைந்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றார் படேல்.












Click it and Unblock the Notifications