கொல்கத்தா மாநகராட்சியை கைப்பற்றியது மம்தா கட்சி-இடதுசாரிகளுக்கு பெரும் தோல்வி!
கொல்கத்தா: உள்ளாட்சி தேர்தலில் கொல்கத்தா மாநகராட்சியை இடதுசாரிகளிடமிருந்து மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
மேற்கு வங்காள மாநில உள்ளாட்சித் தேர்தல் கடந்த 30ம் தேதி நடந்தது. ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியே போட்டியிட்டன. இதனால் கடும் மும்முனைப் போட்டி நிலவியது.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் கொல்கத்தா மாநகராட்சியில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மாநிலத்தின் மற்ற இடங்களில் திரிணமூல்-இடதுசாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 141 வார்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் 93 இடங்களில் முன்னணியில் உள்ளது.
இடதுசாரிகள் 36 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், மற்றவர்கள் 5 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர். இதன்மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கொல்கத்தா மாநகராட்சியை கைப்பற்றுகிறது.
மற்ற நகராட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முடிவு தெரிந்த 57 நகராட்சிகளி் திரிணமூல் 25 இடங்களிலும், இடதுசாரிகள் 23 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- திரிணாமுல் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றன. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி ஏற்படவில்லை. இரு கட்சிகளும் அதிக இடங்களில் போட்டியிட விரும்பியதால் கூட்டணி உடைந்து தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில் காங்கிரசுக்குத் தான் பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜி பெற்றுள்ள இந்தப் பெரும் வெற்றி இடதுசாரிகளை கலக்கத்தி்ல் ஆழ்த்தியுள்ளது.
ப.சி உண்மை பேசியதால் மம்தா கோபம்:
இதற்கிடையே, ரயில் கவிழ்ப்புக்கு இடதுசாரிகள் காரணம் அல்ல, நக்ஸலைட்டுகளே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உண்மையைச் சொன்னதால் கோபமான ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
ஆனால் கூட்டத்தை மம்தா புறக்கணித்தார். அவரது கோபம்.. சமீபத்தில் மேற்கு வங்க மாநிலம் மித்னாபூரில் நடந்த ரயில் கவிழ்ப்பு சம்பவத்துக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தான் காரணம் என்று மறைமுகமாகக் கூறினார் மம்தா.
ஆனால், ரயில் கவிழ்ப்பு சம்பவத்துக்கு மாவோயிஸ்டுகளும், அவர்களைச் சார்ந்த பயங்கரவாத அமைப்புகளுமே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். சிதம்பரம் இவ்வாறு கூறிய மறுநாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை மம்தா புறக்கணித்துள்ளார்.
ஏதாவது காரணத்துக்காக மத்திய அரசுடன் மோதி அடிக்கடி மத்திய அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணித்து வருகிறார் மம்தா. இது குறித்து மம்தாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு,
எனக்கு முக்கியமான வேலை எனக்கு இருந்ததால் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டம் எவ்வளவு முக்கியம் என்பதன் அடிப்படையிலேயே அதில் பங்கேற்க முடியும். சில நேரங்களில் பங்கேற்க முடியும். முக்கியமான வேலை இருக்கும்போது பங்கேற்க முடியாது. இது சாதாரண விஷயம்தான். நீங்கள் தான் இதை பெரிதுபடுத்துகிறீர்கள்.. போங்கள் இங்கிருந்து என்று கோபமாக விரட்டினார்.












Click it and Unblock the Notifications