கார் தராததால் திருமணம் பாதியில் நிறுத்தம்-இன்னொரு பெண்ணுடன் திருமணம்
குடியாத்தம்: மணமகள் வீட்டில் வரதட்சணையாக மாருதி கார் தராததால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மணமகன் குடும்பம், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைத்த கொடுமை குடியாத்ததில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாஸ்கரின் மகள் லாவண்யா (21). பி.சி.ஏ. பட்டதாரியான இவருக்கும் குடியாத்தத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரி்ன் மகன் வில்வநாதன் (29) என்ற சாப்ட்வேர் என்ஜீனியருக்கும் கடந்த 11ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களது திருமணம் இன்று குடியாத்தம் காமாட்சி பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.
மணமகன் வீட்டார் திருமணத்தின்போது ஒரு காரும், கூடுதலாக 15 சவரன் நகையும் கேட்டுள்ளனர். திருமணம் முடிந்த பின் இது குறித்துப் பேசி கொள்ளலாம் என்று மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடக்கவிருந்த திருமணத்துக்காக பெண் வீட்டார் ஆம்பூரில் இருந்து நேற்று மாலை குடியாத்தம் திருமண மண்டபத்துக்கு வந்தனர். ஆனால், மணமகன் வீட்டார் யாரும் வரவில்லை.
மேலும், மண்டபத்தை பதிவு செய்ததை மணமகன் வீட்டார் ரத்து செய்துவிட்டதாகவும் திருமண மண்டப மேனேஜர் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் தவித்தனர். மணமகன் வீட்டாரை தொடர்பு கொள்ள தொலைபேசயி்ல் முயன்றபோது தொடர்பை அவர்கள் துண்டித்தனர். மணமகன் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டிக் கிடந்தது.
இதையடுத்து மணப்பெண் லாவண்யா குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில்,
மணமகன் வில்வநாதன், அவரது தாய் சுமதி, பாட்டி கஸ்தூரி, தம்பி தியாகராஜன், தாய் மாமன்கள் தாமோதரன், சண்முகம் ஆகியோர் வரதட்சணையாக மாருதி காரும், கூடுதலாக நகையும் கேட்டு இன்று நடக்க இருந்த எனது திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மணமகன் உள்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், மாப்பிள்ளை வீட்டாரும் முக்கிய உறவினர்களும் வீடுகளைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதால் கைது செய்ய முடியவி்ல்லை.
இந் நிலையில் மணமகன் வில்வநாதனுக்கும் கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழனி கோவிலில் நேற்று திருமணம் நடந்துவிட்டதாக மணமகன் வீட்டாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications