பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி

திமுக, பாமக கூட்டணி சிக்கல் தொடர்பாக நேற்று 2வது முறையாக பாமக குழுவினர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர். முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, கட்சித் தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட ஐவர் குழுவினர் இந்த சந்தப்பில் கலந்து கொண்டனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கருணாநிதியிடம் சில தகவல்களை பேசியிருக்கிறோம். அவர் கூறியதை டாக்டர் ராமதாசிடம் சொல்வோம். இறுதி முடிவை அவர் அறிவிப்பார் என்றார்.
ஏன் இத்தனைக் குழப்பம் என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டதற்கு, குறுக்கிட்டுப் பேசிய வேல்முருகன், கூட்டணி சேருவது என்பது சாதாரண விஷயமா, பலமுறை பேசித்தானே ஆக வேண்டும் என்றார்.
அப்போது ஒரு நிருபர், காடுவெட்டி குரு, பூம்புகாரில் முதல்வர் கருணாநிதியை விமர்சித்துப் பேசியுள்ளாரே என்று கேட்டபோது, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று குறுக்கிட்டுக் கூறினார் திருக்கச்சூர் ஆறுமுகம்.
பின்னர் முதல்வர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
கேள்வி: பா.ம.க. முன்னணியினர் உங்களை இரண்டாவது முறையாகச் சந்தித்திருக்கிறார்கள். என்ன கோரிக்கை வைத்தார்கள்?.
பதில்: இரண்டாவது முறை, மூன்றாவது முறை என்றெல்லாம் கணக்கில்லை. அவர்கள் வந்தார்கள். எதிர்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது பற்றிப் பேசினார்கள். நானும் பேசினேன். "அது பற்றி இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் சொல்வார்கள்'' என்று உங்களிடத்திலே அவர்கள் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். எங்கள் கட்சியிலும் அதைப் போல கழக முன்னணியினரோடு விவாதித்து எடுக்கின்ற இறுதி முடிவினை நான் வெளியிடுவேன் என்பதை அவர்களிடத்திலே சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி அமைவதில் - இடையில் தடையாக இருக்கக் கூடிய விஷயம் என்ன?.
பதில்: நீங்கள் தான்.
கேள்வி: மேற்கொண்டு உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக நீங்கள் வெளியிட்ட பிறகும் என்ன பேசுகிறார்கள்?.
பதில்: அந்த நிலைப்பாட்டை ஒட்டித்தான் அவர்களுடைய பேச்சுத் தொடர்ந்தது. அது பற்றி தேவைப்பட்டால் டாக்டரும் (ராமதாஸ்), நானும் பேசுவதற்கே கூட வாய்ப்பு ஏற்படுத்துவதாக அவர்கள் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
கேள்வி: 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்கள் அவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று தி.மு.க.விடம் உறுதி மொழியை எதிர் பார்க்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?.
பதில்: அப்படியொன்றும் இன்றைய சந்திப்பில் அதிக இடங்கள் கேட்கவில்லை.
கேள்வி: நேற்று பூம்புகாரில் பா.ம.க. சார்பில் பேசிய ஒரு தலைவர் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு ராஜதந்திர முடிவில்லை என்றும், முதுகில் குத்தி விட்டார்கள் என்றும் பேசியிருக்கிறாரே?.
பதில்: பேசியது யார்?.
கேள்வி: குரு பேசியிருக்கிறாரே?.
பதில்: புராணத்தில் குரு என்றால் யார்? (சுக்ராச்சாரியார்) அவர் நல்ல காரியங்களைக் கெடுத்துக் கொண்டிருந்தார். குருவிற்கு அவ்வளவு தான் விளக்கம்.
கேள்வி: கடந்த கால சம்பவங்களையெல்லாம் மறந்து விட்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு கூட்டணிக்கு நீங்கள் ஒப்புதல் கொடுத்த பிறகும் அவர்கள் இவ்வளவு இழுபறியோடு நடக்கக் காரணம் என்ன?.
பதில்: எழுத்தாற்றல் மிக்க செய்தியாளர்களாகிய நீங்கள் இது பற்றி கட்டுரை தீட்டலாம், முடிந்தால் உங்கள் பத்திரிகையில் தலையங்கம் தீட்டலாம்.
கேள்வி: தி.மு.க. தான் தங்களது முதல் எதிரி என்றும் அதை அழிக்க வேண்டும் என்றும் பென்னாகரம் இடைத் தேர்தலில் டாக்டர் ராமதாஸ் பேசினாரே, அதற்காக இப்போது உங்களைச் சந்தித்த தலைவர்கள் வருத்தம் தெரிவித்தார்களா?.
பதில்: பென்னாகரம் இடைத் தேர்தலைப் பொறுத்தவரையில் பா.ம.க.வும், தி.மு.க.வும் தான் முக்கிய போட்டியிலே இருந்ததால், அவர்களுக்கு நாங்கள் எதிரியாகவும், எங்களுக்கு அவர்கள் எதிரியாகவும் இருந்ததாலும், அ.தி.மு.க. போட்டியிலே முன்னிலையில் இல்லாத காரணத்தாலும் எங்களை எதிரி என்று சொல்லி அடையாளம் காட்டியிருக்கலாம் அல்லவா? என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications