இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு
மும்பை: நடப்பு நிதியாண்டில் ஜூன் 15ம் தேதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், டாப் 100 இந்திய நிறுவனங்கள் செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) ரூ. 12,661 கோடியை எட்டியுள்ளது.
நாட்டின் தொழில் துறை சிறந்த வளர்ச்சியை அடைந்து வருவதையே இது காட்டுகிறது. முன்னணி நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.7 சதவீதம் அதிகரித்து ரூ.12,661.73 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிக வரியைச் செலுத்தியதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் செலுத்தியுள்ள வரி ரூ.1,093 கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 24.20 சதவீதம் அதிகமாகும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி, இரண்டு மடங்காகியுள்ளது. இந்த நிறுவனம் ரூ.110 கோடி செலுத்தியுள்ளது.
மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தனது முன்கூட்டிய வரியை 3 மடங்காக கட்டியுள்ளது. அதாவது ரூ.63 கோடி வரி செலுத்தியுள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.469 கோடியும், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.46 கோடியும் முன்கூட்டிய வரி செலுத்தியுள்ளன.
வீட்டிக் கடன் வழங்கும் எச்.டி.எப்.சி. வங்கி ரூ.215 கோடியும், யூனியன் பேங்க் ரூ.168 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.225 கோடியும் செலுத்தியுள்ளன.
அதே நேரத்தில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான, ஸ்டேட் வங்கி செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி ரூ.1,068 கோடியிலிருந்து ரூ.869 கோடியாகக் குறைந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரூ.350 கோடி வரி செலுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்கூட்டிய வரியை இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.653 கோடி செலுத்தியுள்ளது.
டி.சி.எஸ். சாப்ட்வேர் நிறுவனம் செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி 142 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.53 கோடி செலுத்திய இந்த நிறுவனம் இந்த ஆண்டு ரூ.128 கோடி செலுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications