அக்கா மகள் என்றும் பார்க்காமல் அரசு டாக்டர் செய்த கேவலமான காரியம்.. தூக்கிய சென்னை போலீஸ்
சென்னை: சென்னையில் அக்காள் மகளுக்கே ஆபாச புகைப்படம் அனுப்பியதாக அரசு மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ படிப்பிற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டதால் அக்காள் மகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "எனது சகோதரர் பெயர் அசோக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அசோக்கின் மருத்துவப் படிப்பிற்காக நான் 5 லட்சம் ரூபாய் செலவு செய்தேன். அப்போது இருந்தே எனது மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்தார். என் மகளை திருமணம் செய்தால் தான் அந்த பணத்தை தருவேன் என கடன் உதவி அளித்தேன்.

வாட்ஸ் அப்பில் ஆபாச புகைப்படம்
இப்போது அவர் மருத்துவர் ஆகிவிட்டார். சமீபத்தில் அரசு மருத்துவராக தஞ்சையில் பணிக்கு சேர்ந்தார். என் மகளை கட்டிக்கொள்கிறேன் என வாக்குறுதி கொடுத்ததால் தான் நான் அவருக்கு 5 லட்சம் பணம் கொடுத்து இருந்தேன். ஆனால் இன்னைக்கு அரசு மருத்துவர் ஆனதும் என் மகளை திருமணம் செய்ய மாட்டேன் என சொல்லி ஏமாற்றிவிட்டார். இதனால் நான் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டேன். தொடர்ந்து வலியுறுத்தியும் பணத்தை தராமல் அசோக் ஏமாற்றிக்கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் எனது மகளின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் புகைப்படம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதை ஓப்பன் செய்து பார்த்த போது ஆபாசமாக புகைப்படங்களும், குறுஞ்செய்தியும் இருந்தது. மேலும் 'வாட்ஸ் - அப்பில் வீடியோ கால் செய்து என்னிடமும், எனது மகளிடமும் தகாத வார்த்தையால் பேசினார். பணம் தரமுடியாது எனவும் கொலை மிரட்டல் விடுத்தார்.
தஞ்சையில் அரசு மருத்துவர் கைது
இதுமட்டுமில்லாமல் என் மகள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். எனவே எனது சகோதரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணம் ரூ.5 லட்சத்தை திருப்பி தர வேண்டும். என்று கூறியிருந்தார். இதன் பேரில் விசாரணை நடத்திய தேனாம்பேட்டை போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அசோக் தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தஞ்சை காவல் நிலையத்தில் அவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அசோக்கை கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
