சென்னை-கோவை 'துரந்தோ'; நாகர்கோவில்-பெங்களூர் வாராந்திர ரயில்; கோவை, மதுரை-திருப்பதி புதிய ரயில்

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதை பொது மேலாளர் தீபக் கிஷன் வெளியிட்டு தமிழகத்துக்கு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகம் செய்தார். அதன் விவரம்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு 'தூரந்தோ எக்ஸ்பிரஸ்" என்ற புதிய ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சென்னையில் புறப்பட்டு வழியில் எங்கும் நிற்காமல் கோவை செல்லும் 'நான் ஸ்டாப்' ரயில் ஆகும்.
இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.
சென்னையிலிருந்து காலை 6.50 மணிக்கு கோவைக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும். மறுமார்க்கத்தில், கோவையிலிருந்து மாலை 3.05 மணிக்கு துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்னையை வந்தடையும்.
சென்னை-ஹால்டியா (அஸ்ஸாம்) எக்ஸ்பிரஸ் ரயில். இது வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்படும்.
சென்டிரல்-நியூ ஜல்பால்புரி (அஸ்ஸாம்) எக்ஸ்பிரஸ் ரயில். இது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்னையில் புறப்படும்.
கோவை-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ். இந்த ரயில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் கோவையில் இருந்து புறப்படும்.
மதுரை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில். வியாழன், சனிக்கிழமைகளில் மதுரையில் இருந்து கேரள மாநிலம் போத்தனூர் வழியாக இந்த ரயில் செல்லும்.
திருச்சி-மங்களூர் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புறப்படும்.
நாகர்கோவில்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மதுரை, ஓசூர் வழியாகச் செல்லும்.
புதுச்சேரி-காட்பாடி எக்ஸ்பிரஸ். இது வாரந்தோறும் புதன்கிழமைகளில்புதுச்சேரியில் இருந்து காட்பாடி செல்லும்.
மின்சார ரயில்கள்:
சென்னை- திருப்பதி- நெல்லூர் இடையே புதிய மின்சார ரயில்
வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இதேபோல சேலம்- காட்பாடி இடையே 6 நாட்களும், கோவை- ஈரோடு இடையே 6 நாட்களும் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
மேலும் திருச்செந்தூர்-நெல்லை, மயிலாடுதுறை-தஞ்சாவூர், கோவை-பொள்ளாச்சி இடையே புதிய பயணிகள் ரயில் இயக்கப்படும். இந்த ரயில்களின் நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், கடற்கரை- வேளச்சேரி, கடற்கரை- திருத்தணி இடையிலான ரயில்கள் அதிகரிக்கப்படுகின்றன. மேலும் பல ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது.
இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய ரயில்வே கால அட்டவணை நாளை முதல் அமலுக்கு வரும். தெற்கு ரயில்வேயில் 208 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 254 பாசஞ்சர் ரயில்களும், 688 மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் கடந்த ஆண்டு ரூ.2,354 கோடி வருவாய் கிடைத்தது.
தினமும் சராசரியாக 18 லட்சம் மக்கள் பயணிக்கிறார்கள். வருடத்துக்கு 68 கோடி பேர் பயணம் செய்கிறார்கள்.
சேலம்- நாமக்கல் 51 கிமீ புதிய ரயில் பாதை அமைக்கும் பணி 2011 மார்ச் மாதம் முடிவடையும் நாகூர்- காரைக்கால், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி அகல ரயில் பாதை பணிகள் விரைவில் முடிக்கப்படும். மயிலாடுதுறை- திருவாரூர், திண்டுக்கல்- பழனி, நெல்லை- தென்காசி ஆகிய அகலப்பாதை பணிகள் மார்ச் மாதம் முடிவடையும்.
அனந்தபுரி, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தண்டவாள ரோந்து-டிராக்மென்களுக்கு வாக்கி டாக்கி:
இந் நிலையில் ரயில் தண்டவாளங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் டிராக்மென்களுக்கு வாக்கி டாக்கி, செல்போன் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேரங்களில் ரயில் போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் தண்டவாளங்களை தகர்ப்பது, தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து தடைகளை ஏற்படுத்துவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதை முறியடிக்கும் வகையில் தண்டவாளங்களில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட இனி ஒரு டிராக்மெனுக்கு பதிலாக 2 பேர் அனுப்பப்படுவார்கள். இரவு நேர பணியில் ஈடுபடும் அனைத்து டிராக்மேன்களுக்கும் வாக்கி டாக்கி மற்றும் செல்போன் வழங்கப்படும். 3 மாதத்திற்குள் இந்த கருவிகளை மத்திய அரசு வழங்கும்.
ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 35,000 காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்பு என்பதை மாற்றி, கிராமப்புற இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், குறைந்த பட்ச கல்வியை 8ம் வகுப்பாக குறைக்க ரயில்வே அமைச்சர் மந்திரி மம்தா பானர்ஜி ஒப்புக் கொண்டுள்ளார்.
50 வயதுக்குட்பட்ட ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள், டிராபிக் பிரிவில் பணியாற்றும் பாயிண்ட்மென், ரூ.1,800 கிரேடு சம்பளத்தில் உள்ள டிராக்மென்கள் மற்றும் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றால் (வி.ஆர்.எஸ்.) அவர்களின் வாரிசுகளுக்கு வேலை கிடைப்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிட இருப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications