நாளை வெளியிடப்படுகிறது வாக்காளர் பட்டியல்
நெல்லை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதையொட்டி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2010-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. கிராமப்புரங்களுக்கு தாலுகா அலுவலங்களிலும், நகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி அலவலகங்களிலும், வரையறுக்கப்பட்ட ஓட்டுச் சாவடி மையங்களிலும், தபால் நிலையங்களிலும் இப்பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களும் மற்றும் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றத்திற்காக வி்ண்ணப்பித்த வாக்காளர்களும் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். ஜூலை 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை வரையறுக்கப்பட்ட ஓட்டுச் சாவடி மையங்களிலும், தபால் நிலையங்களிலும் புதிய வாக்காளர் சேர்க்கை படிவம் 8, அதே சட்டசபை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யும் படிவம் 8ஏ ஆகியவை வழங்கப்படுகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பெயர் சேர்க்க இதுவே இறுதி வாய்ப்பு. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக இன்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு சரி பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
