Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை போர் குற்றம்: ஐ.நா. குழுவுக்கு ருத்திரகுமாரன் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

Rudrakumaran
கொழும்பு: இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதை நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவர் ருத்திரகுமாரன் வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிபுணர்கள் குழுவின் நியமனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. இலங்கைத் தீவில் நிகழ்ந்த மனித உரிமைகள், மனிதாபிமான விதி மீறல்களை விசாரிக்கவென ஐ. நா. குழு நியமித்ததை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுகிறது.

இலங்கைத் தீவில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயம் பெற்றுத்தரும் வகையில் ஐ. நா. செயலாளர் இந்தக் குழுவை நியமிக்க எடுத்த முடிவினை அதி முக்கியமான ஒன்றாகவே நாம் கருதுகிறோம்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்த அப்பாவித் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமாக இருந்தவர்கள் யாருமே இதுவரைக்கும் வகை கூற வைக்கப்படவில்லை. இந்நிலையில் சிறீலங்கா அரசபடைகள் மேற்கொண்ட போர்க் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலை என்பவற்றை உள்ளடக்கிய சர்வதேச நியதிகளெல்லாம் மீறப்பட்டதை மூடி மறைக்க எத்தனிக்கும் சிறீலங்கா அரசின் முயற்சிகளை இக்குழுவின் நியமனம் முறையாக நிராகரிக்கிறது.

மற்றைய தேசியப் போராட்டங்கள் மீது சிறீலங்காவின் அணுகுமுறையினைக் கையாள நினைக்கும் அரசுகளுக்கும் இது ஒரு பாடமாக அமைகிறது.

இதற்கும் அப்பால் இலங்கை அரசாங்கம் தன்மேல் சுமத்தப்படும் சர்வதேச கண்டனங்களை சமாளித்துக் கொள்ளவென விசாரணைக் குழுக்கள் என்ற பெயரில் மேற்கொள்ளும் அர்த்தமற்ற முயற்சிகளைப் போதுமானவை என ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஐ.நா. நிறுவனத்தின் நிலைப்பாட்டினை நாங்கள் போற்றுகிறோம்.

குற்றம் செய்தவர்கனோ அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களோ ஒரு விஷயத்தை விசாரிக்க முற்படுவது குற்றவாளியே தீர்ப்பு வழங்குவதற்குச் சமமானது. ஏற்கெனவே பல்வேறு மனித உரிமை விஷயங்களில் தனது குறைபாடுகள் பற்றி கேள்வி எழுப்புபவர்களைத் திசை திருப்பும் வகையில் விசாரணைக் குழுக்களை நியமிப்பது இலங்கை அரசாங்கத்திற்கு கைவந்த கலையாகவே உள்ளது.

பல்லாயிரம் தமிழ் உயிர்களை மரணத்திலிருந்து பாதுகாக்கத் தவறிய சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தியாவது அத்தனை உயிர்களுக்கும் நீதி பெற்றுத்தர முன் வந்திருப்பது நல்ல விஷயம். பல தசாப்தங்களாக நீண்டு கொண்டிருக்கும் இலங்கைத் தேசிய இனங்களுக்கு இடையேயான பிணக்கிற்குத் தீர்வு காண்பதில் நீதியும் வகை கூறும் தன்மையும் முக்கியமான முதற்படிகள் என்பதனால் இம்முயற்சியில் ஐ.நாவின் முன்னெடுப்பினை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

இதனால் ஐ.நாவின் விசாரணைக் குழுவிற்கு எமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதோடு அவர்களது பணிக்கு உதவும் வகையில் பெருந்தொகையான நேரடி ஆதாரங்களைத் திரட்டி வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம்.

இந்த நிபுணர் குழு தாம் இலங்கைக்கு போய்வரும் உத்தேசம் தமக்கு இல்லை என்று தெரிவித்திருந்தாலும் வன்னிப் பிரதேசத்தில் தமக்கு ஏற்பட்ட கொடூரங்களைச் சந்தித்த அதே மக்களிடமிருந்து நேரடி அனுபவங்களைச் சுயாதீனமாகவும் அழுத்தம் எதுவும் இன்றியும் ஐ. நா. பெற்றுக்கொள்ள வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

நேரடிச் சாட்சிகளிடம் இருந்து விபரங்களைப் பெறத்தவறும் பட்சத்தில் இரண்டாமவர்கள் முன்வைக்கும் விபரங்கள் திரிபுபடுத்தப்படுவதும் அதனால் விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை குறைக்கப்படுவதும் சாத்தியமாகின்றன. நாம் இங்கே குறிப்பிட்டவற்றின் அடிப்படையில் நிபுணர் குழு தமது நிலைப்பாட்டினை மாற்றி போர் நடந்த இடங்களுக்குத் தாம் நேரடியாக செல்வதாக முடிவு செய்தால் அத்தருணத்தில் சாட்சி வழங்க முன் வருவோரது உயிர்ப் பாதுகாப்புக்கும், அவர்களது பெயரகள் வெளிவராது இருப்பதற்கும் ஐ.நா. உத்தரவாதம் அளிக்க வேண்டுமென நாம் வலிந்து கூறுகிறோம்.

சிறீலங்கா அரச படைகள் வன்னிப் பெரும் நிலப்பரப்பில் தமிழ் குடிமக்கள் மீது நடத்திய எண்ணிலடங்காத குற்றச் செயல்கள் பற்றிய விசாரணைகள் சுதந்திரமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொள்ளப் படவேண்டுமென நாம் விதந்துரைக்கிறோம்.

அத்தோடு இனப்படுகொலைக் குற்றமானது நிகழ்ந்துள்ளது என்பதனைத் தெளிவுபடுத்தக் கூடிய ஆதாரங்கள் அனைத்தையும் அவதானமாக இக்குழு ஆய்வு செய்யவேண்டுமெனவும் வினயத்தோடு வேண்டுகிறோம்.

முன்னைய யூகோஸ்லாவியா நாட்டுக்கான சர்வதேச குற்றச்செயல் விசாரணைக்குழு 7,826 ஆண்களின் கொலைகளை இனப் படுகொலையென இம்மாதம் 10ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியபோது குறிப்பிட்ட மாதிரி, நடுங்க வைக்கும் எண்ணிக்கையில் நடந்தேறிய கொலைகள, அவை திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டமை, கொலையுண்டவர்கள் இலக்கு வைத்துத் தேடப்பட்ட முறை இவையெல்லாமே இலங்கையில் நடந்தேறியதும் இனப் படுகொலைதான் என்பதைத் தெளிவாக்குகிறது எனப் பல அரசியல் ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் நம்புகிறார்கள்.

இக் குற்றச் சாட்டுக்கள் எல்லாம் நிபுணர் குழுவினால் வெளிப்படையாக விசாரிக்கப்படும்போது, 1956ம் ஆண்டு முதல் இன்றுவரை ஆறு தசாப்தங்கட்கு மேலாகத் தமிழ் மக்களுக்கு எதிராக அரச அனுசரணையோடு நிகழ்த்தப்பட்டு வரும் வன்செயல்களையும் அதனால் அவர்களுக்கு ஏற்ப்பட்ட உயிர், பொருள் இழப்புக்களையும் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும.

உயிரிழப்புக்களின் எண்ணிக்கையினை, இலங்கைத் தீவில் ஆரம்பத்திலிருந்த தமிழ் ஜனத்தொகையினோடு இணைத்துப் பார்ப்பதன் மூலம்தான் அரசாங்கத்தின் கொள்கைகள் எவ்வாறு தமிழ் மக்களைப் பாதித்து வந்துள்ளன என்பது பற்றிய ஒரு நியாயமான கணிப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்ச் சமூகத்தினால் ஜனநாயக முறைகளின்படி தெரிவு செய்யப்பட்ட சர்வதேச அவையென்ற வகையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள விசாரணையின் கால அவகாசம் குறித்த எமது விசனத்தையும் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் பார்வையகம், சர்வதேச நெருக்கடிக் குழு போன்ற மனித உரிமை நிறுவனங்கள் எல்லாமே யுத்தத்தின் இறுதிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளைத் தயாரித்து முடிக்கப் பல மாதங்களும் ஓராண்டும் கூட எடுத்துள்ள வேளையில், மூன்று பேரைக் கொண்ட இந் நிபுணர் குழு தனது விசாரணைகளை மேற்கொள்ள நான்கு மாதங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளனவென்பது பெருமளவில் நடந்தேறிய குற்றங்களை நியாயமான முறையில் விசாரித்து முடிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தப் போதாத காலமாகவே எமக்குத் தென்படுகிறது.

எனவே ஐ.நாவினர் இந்த விசாரணைக்குரிய காலத்தினை அதிகரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். இன்றைய உலகில் சர்வதேச விதிமுறைகள் அதிமோசமான வகையில் மீறப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இலங்கை நிலை பற்றிய போதுமானதான ஒரு அறிக்கையை வரையவும் இது வழிவகுக்குமென நாம் நம்புகிறோம்.

குற்றம் புரிந்த எவரும் வகை கூறவேண்டி நிர்ப்பந்திக்கப்படும் போது, விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவானது தனது விசாரணையின் முடிவுகளை செயற்படுத்தும் அதிகாரம் கொண்டிருந்தால் மட்டுமே இவையெதுவும் அர்த்தமுள்ளவை ஆகின்றன. ஐ.நாவினர் விசாரணைக் குழுவினை நியமித்த செயலை ஊக்குவிக்கின்ற இவ்வேளையில், அக்குழுவுக்கு வழங்கப்பட்ட கட்டளையிலுள்ள குறைபாடுகளையும் நாம் குறிப்பிட விரும்புகிறோம்.

இக்குழு தென்படுத்துகின்ற பலரிடமும் அறிந்து கொண்டு பரிந்துரைக்கும் தன்மை, குழுவின் நியமனத்தின் பின்னாலுள்ள அரசியல் உறுதிப்பாட்டினைக் கேள்விக்கு உள்ளாக்குவதோடு மனிதப் பேரழிவுகளின் போது நீதியுடனும் பொறுப்புணர்வோடும் சர்வதேச சமூகம் நடக்கத் தவறுமிடங்களில் அவற்றினை எடுத்துரைத்துப் பரிகாரம்தேடும் வாய்ப்பினையும் தவறவிடுவதை நாம் காண்கிறோம்.

அத்தோடு இக்குழு தனது விசாரணையின் பெறுபேறுகளை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டுமென நாம் கோருகிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் இலங்கைத் தீவின் வன்னிப் பெரும் நிலப்பரப்பில் சென்ற ஆண்டு நிகழ்ந்தேறிய சர்வதேச விதிமுறை மீறல்கள் பற்றிய பரந்த கருத்தாடல்களை சமூகத்தின் மத்தியில் தொடக்கி வைக்கவும் இவ்வகை அநீதிகள் மீண்டுமொரு முறை நிகழ்வதைத் தடுக்கும் வகையில் உரிய பரிகாரங்களை மேற்கொள்ளவும் உதவுமென நாம் நம்புகிறோம்.

இறுதியாக, இக்குழுவின் விசாரணைகளின் மூலம் பல்லாயிரம் தமிழுயிர்களின் கொலைக்கு காரணமாயிருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், நாம் இழந்து தவிக்கும் ஆயிரமாயிரம் உறவுகளுக்கு இறுதியில் நீதி கிடைக்குமெனவும் நாம் எதிர்பார்க்கிறோம். உங்களது முயற்சிகட்கு ஆதரவளிக்கும் வாய்ப்பினை நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இவ்வாறு ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+