தமிழகத்தில் சுகாதாரம்-சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.1,903 கோடி நிதியுதவி

இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த "தமிழ்நாடு சுகாதாரத் திட்டம்'' முதற்கட்டப் பணிகள் 2010 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தன. இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் மூன்றாண்டு காலத்திற்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென முதல்வர் கருணாநிதி மத்திய அரசு மூலம் உலக வங்கியிடம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உலக வங்கி 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2013ம் ஆண்டு செப்டம்பர் வரை மூன்றாண்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் பயனாக 564 கோடியே 94 லட்ச ரூபாய் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழக அரசின் 62 கோடியே 7 லட்ச ரூபாயையும் சேர்த்து மொத்தம் 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், கருப்பைவாய் புற்று நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், மார்பகப் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், இதய நோய்த் தடுப்புத் திட்டம், 10 அவசர கால ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்திற்குக் கூடுதல் ஆம்புலன்ஸ் ஊர்திகள், அமரர் ஊர்தி சேவைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு கூடுதல் நிதியுதவி:
அதே போல 1670 கோடி ரூபாய் உலக வங்கி உதவியுடன் 490 கோடி ரூபாய் தமிழக அரசின் பங்கையும் சேர்ந்து மொத்தம் 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் 11 மாவட்டங்களை இணைக்கும் 13 புறவழிச் சாலைகளை உள்ளடக்கிய 725 கிலோ மீட்டர் நீளச் சாலைகளை மேம்படுத்துதல், 1033 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் நிறுவன அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்படடுகின்றன.
இந்தத் திட்டத்திற்குக் கூடுதல் நிதியுதவி வழங்கி 2012ம் ஆண்டு வரை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டுமென முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை உலக வங்கி ஏற்றுக் கொண்டு 232 கோடியே 67 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் 49 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்குகிறது. இதன் காரணமாக 1903 கோடி ரூபாய் உலக வங்கி நிதியும், 539 கோடி ரூபாய் தமிழக அரசின் நிதியும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 442 கோடி ரூபாய் திருத்திய திட்ட மதிப்பீட்டில் 31.3.2012 வரை இந்த சாலை மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தமும் இன்று கையெழுத்தானது.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று நடைபெற்ற இந்த இரண்டு ஒப்பந்தங்களுள், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் குறித்த ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக நிதித்துறை இணைச் செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் வி.கு.சுப்புராஜ், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா ஆகியோர் கையொப்பமிட்டனர்.
சாலை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக நிதித்துறை இணைச் செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலைத் துறை செயலாளர் ஜி.சந்தானமும், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் ப்ரீத்தி குடேசியாவும் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வுகளின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், உள்துறை முதன்மை செயலாளர் கு.ஞானதேசிகன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநருமாகிய முனைவர் ச.விஜயகுமார், நிதித்துறை சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குனருமாகிய இரா.தியாகராஜன் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications