மீனவர் படுகொலை-கருணாநிதி கண்டனம்-பிரதமருக்கு அவசர கடிதம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இந்திய மீனவர்களை தாக்கக் கூடாது என்று தொடர்ந்து கோரி வந்த நிலையிலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவது தொடர்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக நீங்கள் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம்:

கடல் பகுதியில், மீன் பிடிப்பதற்கான தகுதியைப் பெற்று இருக்கும் தமிழக மீனவர்களுக்கு, உடல் ரீதியாக எந்தவிதத்திலும் துன்புறுத்தக் கூடாது என்று, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு, இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருவது பற்றி நான் உங்கள் (பிரதமர் மன்மோகன் சிங்) கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

7-7-2010 அன்று இரவு நடந்த சம்பவம் தொடர்பாக, இன்று (8-7-2010) நான், அளித்த பத்திரிகை செய்தி நகலையும், இதனுடன் இணைத்துள்ளேன். அது என் சுய விளக்கம் ஆகும்.

எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அவர் கோரியுள்ளார்.

இக்கடிதத்தின் நகலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கும் கருணாநிதி அனுப்பி வைத்துள்ளார்.

கடும் கண்டனத்துக்குரிய செயல்

முன்னதாக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

7-7-2010 பிற்பகல் 12 மணி அளவில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு காவல் சரகத்தைச் சேர்ந்த வெல்லப்பள்ளம் கிராமம், மீனவர் காலனியை சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட நான்கு பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் இருபது கடல் மைல் தொலைவில் இரவு பத்து மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது- அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை பயங்கரமாக தாக்கியதாகவும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், வலைகளையும் கடலிலே தூக்கி எறிந்ததாகவும், அந்த தாக்குதலில் செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு சில மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததாகவும் செய்தி வந்துள்ளது.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இவ்வாறு கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர் கதையாக உள்ளது.

தமிழக மீனவர்களின் இந்த துயர நிலை குறித்து- தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பலமுறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கைகளை விடுத்தும் தமிழக மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை.

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் சித்திரவதைக்கும், கொலைக்கும் ஆளாகும்போது- மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மைச் சமாதானப்படுத்துகின்ற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கும் விடுப்பதும்- ஆனால் அதற்கு பிறகு சில நாட்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட, தமிழக மீனவர்களின் இந்நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு- தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட, அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இதுபோன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபடக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு மாறாக, தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக் கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு, இந்த நிகழ்ச்சி பற்றிய உண்மை விவரமும் தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

ரூ.3 லட்சம் நிவாரணம்

இதேபோல, தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:

7-7-2010 அன்று இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த செய்தியினை அறிந்த முதல்வர் கருணாநிதி, செல்லப்பன் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டதோடு, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிட ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்த நிதி நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் மூலமாக செல்லப்பன் குடும்பத்தினருக்கு உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+