போலி மதிப்பெண் பட்டியல்-அதிகாரிகள் சிக்குகிறார்கள்!

Subscribe to Oneindia Tamil

Anna University
சென்னை: என்ஜீனியரிங் கவுன்சிலிங்கின்போது, போலி மதிப்பெண் சான்றிதழை கொடுத்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

என்ஜீனியரிங் கவன்சிலிங்கின்போது 41 மாணவ,மாணவியர் போலியான மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவர்களில் 3 பேருக்கு கல்லூரிகளில் சீட்டும் கொடுக்கப்பட்டு விட்டது. தற்போது அதை நிறுத்தி வைத்துள்ளனர். ரூ. 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை பணம் கொடுத்து இந்த போலி மதிப்பெண் சான்றிதழை இவர்கள் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று சென்னை போலீஸார் வழக்குப்ப பதிவு செய்துள்ளனர். மோசடி, போலி ஆவணம் தயாரித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலி மதிப்பெண் பட்டியலை தயாரித்துக் கொடுத்த கும்பலைப் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிபிஐ வளாகத்தில் போலி சான்றிதழ் விநியோகம்-மாணவர்கள்:

போலி மதிப்பெண் சான்றிதழ்களை தாக்கல் செய்துள்ள மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில்தான் தான் கிடைத்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்குள்ள சிலருக்கும், இந்த மோசடிக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து மதிப்பெண் பட்டியல் பணிகள் தொடர்பான அதிகாரிகள் சிலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

குறைந்த மதிப்பெண்களை திருத்தி கூடுதலாக்கிக் கொடுத்து அவர்கள் மோசடி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறவுள்ளது.

அமைச்சர் பேட்டி:

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் 41 மாணவர்கள் போலியான பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது வருத்தத்துக்குரியதாகும். அவர்களில் முதல் கட்டமாக 5 மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர்.

விடைத்தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்கள் சமர்ப்பித்த மதிப்பெண்களுக்கும், அரசுத் தேர்வுத்துறை வழங்கிய மதிப்பெண்களுக்கும் வித்தியாசம் இருந்ததால் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சான்றிதழ்களில் கையொப்பம் இட்ட அதிகாரியின் பெயரும் மாறி இருந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் ஒருவர், மாணவர்களுக்கு போலியான இருப்பிடச் சான்றிதழ் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த மாணவர்கள் மீது, அவர்கள் எந்த பகுதியில் இருந்து விண்ணப்பம் அனுப்பி இருந்தார்களோ அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை போலீஸ் விசாரணை மூலம் கண்டறியப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைக்கும். எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் பதற்றத்துடன் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 4-ந் தேதி தொடங்கிய என்ஜினீயரிங் கவுன்சிலிங் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 14-ந்தேதி 9 மணி நிலவரப்படி கவுன்சிலிங்குக்கு 25 ஆயிரத்து 64 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 20 ஆயிரத்து 843 பேர் சேர்ந்துள்ளனர். கட் ஆப்' மார்க்கில் 90 சதவீதம் மார்க்கு எடுத்த மாணவர்களில் இதுவரை 100 பேர் தமிழ் வழியில் சிவில் மற்றும் மெக்கானிக் பிரிவில் சேர்ந்துள்ளனர்.

தமிழ் வழியில் உள்ள 1380 இடங்களும் நிரம்பிவிடும் என்று நினைக்கிறேன். தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழ் வழியில் தொடங்கவேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். அவ்வாறு தொடங்க விரும்புபவர்கள் ஏ.ஐ.சி.டி.இ.யில் அனுமதி பெறவேண்டும்.

தமிழ் வழியில் நடத்தப்பட உள்ள கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் பாடங்களுக்கு வரவேற்பு இருந்தால் மற்ற பாடங்களையும் தமிழ் வழியில் தொடங்கப்படும். என்ஜினீயரிங் தேர்வை ஆங்கிலத்திலும் எழுதலாம். தமிழிலும் எழுதலாம். ஆங்கிலமும் தமிழும் கலந்தும் எழுதலாம். இதற்கான அனுமதியை முதல்வர் கருணாநிதி வழங்கி உள்ளார் என்றார்.

தங்கம் தென்னரசு ஆலோசனை:

முன்னதாக போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கல்வித்துறை அதிகாரிகள் அனைவரையும் அழைத்து பேசினார்.

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,

போலி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க ஏற்கனவே மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம், சட்டக்கல்வி, வேளாண்மை படிப்பு ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை நடத்தும் அதிகாரிகளுக்கு ஒரிஜினல் பிளஸ்-2 மார்க் அடங்கிய சி.டி. அனுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மறு மதிப்பீடு மறு கூட்டலுக்கு பிறகு ஏற்பட்ட வித்தியாசமான மார்க் அடங்கிய சி.டி.க்களும் அதே அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த சி.டி.க்களை கொண்டுதான் போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும். போலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் தயாரித்தவர்கள் யார், யார்? இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பதை போலீசார் கண்டறிவார்கள்.

இந்த சி.டி.க்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும், அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும், அனைத்து பாலிடெக்னிக்களுக்கும், சட்டக்கல்லூரிகளுக்கும் மற்றும்பல கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட உள்ளது. இந்த சி.டி.யில் உள்ள மார்க்கையும் மாணவர்கள் கொண்டுவரும் மார்க்கையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். மாற்றம் இருந்தால் தேர்வுத் துறைக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறுகையில்,

தேர்வு அறையில் காப்பி அடித்தால், அவர்களுக்கு அதிக பட்சம் 2 வருடம் தேர்வு எழுத முடியாது. ஆள்மாறாட்டம் செய்தால் 5 வருடம் தேர்வு எழுத முடியாது. ஆனால் போலி மார்க் பட்டியல் தயாரிப்பது பெரிய குற்றம்.

போலி மார்க் பட்டியல் கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும். அவை செல்லுபடியாகாது. எந்த கல்வி நிறுவனத்திலும் சேரமுடியாது. அவர்களின் ஒரிஜினல் சான்றிதழ்களின் நம்பரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த மோசடி குறித்து போலீசார் முழுமையாக விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைப்பார்கள் என்றார்.

தற்போது சிக்கியுள்ள 41 பேரில் 2 பேர் மாணவிகளாவர். இவர்களில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர். இன்னொருவர் விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்தவர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தங்களது பிள்ளைகள் என்ஜீனயரிங்கில் சேர வேண்டும் என்பதற்காக இவர்களின் பெற்றோர்கள்தான் மதிப்பெண்ணைத் திருத்தி மோசடி செய்ததாக தெரிகிறது.

அடுத்தடுத்து 4 சான்றிதழ் கொடுத்த கர்நாடக மாணவர்:

இந்த நிலையில் கர்நாடகத்தில் பிளஸ்டூ படித்த தமிழகத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற மாணவர் அடுத்தடுத்து நான்கு சான்றிதழ்களைக் கொடுத்ததால் அவை அனைத்தும் உண்மையானவையா என்பதை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அருண்குமார் பொறியியல் கவுன்சிலிங்குக்கு 423 மார்க் கொண்ட சான்றிதழை சமர்ப்பித்தார். கையினால் எழுதப்பட்ட அந்த சான்றிதழ் ஏற்புடையது அல்ல என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சிடப்பட்ட சான்றிதழை அனுப்பி வைத்தார்.

பின்னர் மீண்டும் கையால் எழுதப்பட்ட 523 மார்க் கொண்ட மற்றொரு சான்றிதழை அனுப்பினார். இதை ஏற்க முடியாது என கூறப்பட்டதைத் தொடர்ந்து அதன் அச்சிடப்பட்ட சான்றிதழை அனுப்பினார்.

இப்படி நான்கு சான்றிதழ்களை அவர் சமர்ப்பித்ததால், அவை உண்மையானவையா என்பதை அறிய அவற்றை கர்நாடக கல்வி வாரியத்தின் விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+