'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின்

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 30,000 பேர்
அதிமுக முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு தலைமையில் திமுகவில் இணையும் விழா மன்னார்குடியில் நடந்தது.
அதில் ஸ்டாலின் பேசுகையில்,
தமிழகம் முழுவதும் அதிமுகவில் உண்மையாக உழைக்கும் செயல்வீரர்கள் பட்டியலை பார்க்கும்போது முதல் இடத்தில் யார் பெயர் உள்ளது என்றால், அழகு திருநாவுக்கரசு பெயர் தான் இருந்தது. அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.
வருவாரா, வர மாட்டாரா என்று பெருமூச்சோடு இருந்தோம். ஆனால் லேட்டாக வந்திருக்கிறார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்று ரஜினி படத்தில் ஒரு வசனம் உண்டு. அதேபோல அழகு திருநாவுக்கரசு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை இன்று மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவிற்கு வருவோர் எண்ணிக்கை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணம் என்று சொல்கின்ற வகையில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அதிமுகவில் இருந்து சாரைசாரையாக அந்த இயக்கத்தை வழிநடத்தியவர்கள் மட்டுமின்றி அமைச்சராக இருந்தவர்கள், எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் மட்டுமின்றி உங்களை போன்று கட்சிக்கு உழைத்த செயல்வீரர்கள் எல்லாம் தினந்தோறும் திமுகவில் இணைவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
திமுகவில் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து கொண்டிருக்க காரணம், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக சரியாக செயல்படவில்லை. மக்களை பற்றி கவலைப்படாத தலைவியாக ஜெயலலிதா இருக்கிறார்.
திமுக இளைஞரணி சார்பில் ஆகஸ்ட் 4-ந் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தலைவர், தலைமையின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். ஆட்சி நடத்துபவர்கள், ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்று கேட்கிறார்கள்.
பொய் பேசுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது:
பொய் பேசுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது. தேர்தல் நெருங்கும் காலத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஆயிரக்கணக்கானோர் சேருகின்றனர் என்ற பயத்தாலும், தேர்தல் நெருங்குவதாலும், கட்சியிலிருந்து பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் கூண்டோடு விலகுவதையும் கண்டு பயந்து போன ஜெயலலிதா, மிச்சமுள்ளவர்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை சொல்லி அறிக்கைகளை விட்டு கொள்கை குறிக்கோள் இல்லாத போராட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
எதிர்கட்சியானது ஆளும் கட்சி நிறைவேற்றும் திட்டங்களில் குறைகள் இருந்தாலோ, முறைகேடுகள் இருந்தாலோ ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்.
ஜெயலலிதா ஆதாரத்தோடு சொல்லும் தகுதியை பெற்றிருக்கிறாரா?. நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார். அதனால் திமுக இளைஞரணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றார் ஸ்டாலின்.


Click it and Unblock the Notifications
