என்னைக் கொல்ல தற்கொலைப் படைகளை அமைக்கிறது சிபிஎம்-மமதா புகார்

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து நச்சரித்து வரும் மமதா பானர்ஜி சிபிஎம்முக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு புகார்களைக் கூறி வருகிறார். இந்த நிலையில் தன்னைக் கொல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்கொலைப் படைகளை அமைத்து வருவதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் என்னைத் தீர்த்துக் கட்ட அவர்கள் தீர்மானித்து விட்டனர். இதற்காக அவர்கள் தற்கொலைப் படைகளையும் அமைத்து வருகிறார்கள்.
திரினமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது சிபிஎம் கட்சியினர் கொலை வெறித் தாக்குதல்களை ஏவியுள்ளனர். எங்களது கட்சியினரைக் கொன்று அவர்களுக்குப் பக்கத்தில் மாவோயிஸ்டுகள் போஸ்டர்களைப் போட்டு மாவோயிஸ்டுகளைக் கொன்று விட்டதாக கூறிக் கொள்கின்றனர்.
எனக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்தவர்களும் ரகசியக் கூட்டம் போட்டு என்னைத் தீர்த்துக் கட்டுவது குறித்து ஆலோசித்துள்ளனர். இந்தக் கூட்டம் நடந்தது உண்மை. இதை விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கூட்டத்தில்தான் என்னை தற்கொலைப் படை மூலம் தீர்த்துக் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்து விடலாம் எனவும் உறுதி கூறப்பட்டுள்ளது. எவ்வளவு செலவானாலும் என்னைத் தீர்த்துக் கட்டாமல் விடக் கூடாது எனவும் பேசப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசுக்கும் இந்த சதியில் உடன்பாடு இருப்பதாகஅறிகிறேன்.
எனது அசைவுகளை சிபிஎம் அமைச்சர்களும்,தலைவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனது நடமாட்டத்தை வேவு பார்த்து வருகின்றனர். என்னைக் கொல்லஅவர்கள் திட்டமிட்டு விட்டனர். இதுதான் நியாயமான அரசியலா? என்னை அவர்களால் அரசியல் ரீதியாக சந்திக்க முடியவில்லை. அவர்கள் கோழைகள்
என்னை மட்டுமல்லாமல், திரினமூல் இளைஞர் காங்கிரஸ்தலைவர் சுபந்து அதிகாரியையும் தற்கொலைப் படை மூலம் தீர்த்துக்கட்ட தீர்மானித்துள்ளனர். இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும் என்றால், மேற்கு மிதினாப்பூரில் தேவையில்லாமல் தங்களது கட்சியினரை ஆயுதங்களுடன் குவித்துக் கொண்டிருக்கின்றனர். இது வேறு எதற்காகவும் இல்லை. என்னைக் கொல்லத்தான்.
ஆகஸ்ட் 9ம் தேதி நான் லால்கர் செல்லவுள்ளேன். இந்தப் பயணத்தை அவர்கள் விரும்பவில்லை. ஆனாலும் நான் போவேன். அங்கு எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மேற்கு வங்க மாநில அரசுதான் காரணம்.
அங்கு 144 தடை உத்தரவு இருப்பதாக மேற்கு வங்க அரசு கூறுகிறது. ஆனால், அவர்களது கட்சியினர் மட்டும் தாராளமாக சென்று வருகின்றனர். நான் போகக் கூடாதா. அங்கு போவனது எனது ஜனநாயக உரிமை. நான் கண்டிப்பாக போவேன்.
இந்த அரசு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் காணாமல் போய் விடும். அதுவரை மக்கள் சற்று பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் மமதா.












Click it and Unblock the Notifications