மின் கட்டண உயர்வு-அரசு விளக்கம் அளிக்குமாறு டாக்டர் ராமதாஸ் அறிவுரை
சென்னை: தற்போதைய மின் கட்டண உயர்வு தற்காலிகமானதுதான் என்று அரசு விளக்கம் தர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் 7 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டிருக்கிறது.
மின் பகிர்மானத்தில் ஏற்படும் மின் இழப்பை குறைத்தல், நிர்வாக திறனை மேம்படுத்துதல், புதிய மின்திட்டங்களை விரைந்து நிறைவேற்றி சுய மின் உற்பத்தியை பெருக்குதல், அதன் விளைவாக வெளிமாநிலங்களில் இருந்தும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் 3 மடங்கு 4 மடங்கு என அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் இந்த மின் கட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும்.
மின் பகிர்மானத்தில் ஏற்பட்டு வரும் மின்சார இழப்பு 2008-2009 ஆண்டில் 18.3 விழுக்காடு என்று அதிகாரபூர்வமாக மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பு 2009-2010 ஆண்டில் 18.9 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மின் இழப்பு அதிகரித்துக்கொண்டே போவது மின்வாரியத்தின் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதற்காக கட்டணத்தை உயர்த்தி மக்களை தண்டிப்பது என்பது கூடாது.
அண்மையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்திருப்பது மக்களுக்கு இரட்டை அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த இரட்டை அதிர்ச்சியில் இருந்து சிறிதளவாவது மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு முன் வர வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அரசின் வரியை குறைப்பதன் மூலம் ஓரளவு நிவாரணம் அளிக்கலாம்.
அத்துடன் இரு மாதத்திற்கு 600 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்துகிற வீடுகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ஒரு ரூபாய் அளவிற்கு கட்டண உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும். மொத்தத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தில் உயர்வே இல்லை என்று அறிவிக்க வேண்டும்.
புதிய மின் திட்டங்கள் நிறைவடைந்து மின் உற்பத்தி பெருகினால் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது தவிர்க்கப்பட்டு விடும். அதனால் மின்வாரியத்தின் பற்றாக்குறை குறையும். எனவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோருவது தற்காலிகமானது தான் என்று மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மின் உற்பத்தி பெருகி வாரியத்தின் வருவாய் பற்றாக்குறை குறைந்தால் இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் மின் கட்டணம் குறைக்கப்படுமா? என்பது குறித்து மின்வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். அந்த நிலை எப்போது ஏற்படும்? மின் உற்பத்தியில் தமிழ்நாடு எப்போது தன்னிறைவை அடையும்? கட்டண உயர்வில் இருந்து மக்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும்? என்பதையும் மின்வாரியம் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications