சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங். கூட்டணியை தோற்கடிப்பதே லட்சியம்- அரிமாவளவன்
திருநெல்வேலி: வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதே எங்களது லட்சியம் என்று தமிழர்களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கூறியுள்ளார்.
தமிழர்களம் சார்பில் திருநெல்வேலியில் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. திடலில் பிற்பகல் 4 மணிக்கு தமிழர் களத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தலைமையில் பேரணி புறப்பட்டது. இந்த பேரணி முக்கிய சாலைகள் வழியாக பாளை திடலில் முடிவடைந்தது.
இந்த மாநாட்டில், தமிழ் அறிஞர் குணா முன்னிலை வகித்தார். தமிழர்களம் மாநிலப் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தலைமை வகித்தார். மேடையில் சென்னை மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், தமிழர் களம் மாநிலப் பொதுச் செயலாளர் அரிமாவளவன் பேசியதாவது,
தமிழர் இயக்கங்களின் மீது தமிழ்நாட்டை ஆள்கிற தி.மு.க. அரசு நடத்தும் தாக்குதல்களின் ஒரு கட்டமே சீமானின் கைது. இதற்குப் பழி தீர்க்கும் வகையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வையும், காங்கிரசையும் தோற்கடிக்க தமிழர்களம் களமிறங்கும்.
தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றைவைகளை வைத்து பூச்சாண்டி காட்டும் தமிழக அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கின்றோம்.
தமிழகக் கடற்கரையில் இதுவரை 534 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழக மற்றும் இந்திய அரசுகள் இக் கொலைகள் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது வெந்த புணணில் வேல் பாய்ச்சுவது போல சிங்கள இந்தியக் கூட்டணியை வலுப்படுத்தி வரும் இக்கட்டான நிலையில் தமிழர் சீனர் கூட்டணியை உருவாக்கி தமிழருக்கான தற்காப்பை ஏற்படுத்துவோம்.
இன விடுதலைக்காக முத்துக்குமரனைத் தொடர்ந்து உயிர் ஈகம் செய்த 19 மாவீரர்களை வரும் தலைமுறைக்கெல்லாம் நினைவூட்ட முத்துக்குமரன் உயிர் ஈகம் செய்த ஜனவரி 29-ம் நாளை இனப்போர் ஈகிகள் நாளாக கொண்டாடுவோம்.
ஈழ விடுதலைப் போராட்டங்கள் இன்று பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர்களம் அப்போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும். இனம் தன் எதிரியைச் சரியாக அடையாளம் கண்டுவிட்டால் விடுதலைக்கான பாதை தெளிவாகிவிடும்.
திராவிடத் தீமையால் இலக்கு இழந்த தமிழர்கள் தம் எதிரி யார் என்று அடையாளம் காண இயலாது தவித்த நிலைமை மாறும். எனவே, எதிரிகளை அடையாளம் காணுவோம், நட்பாற்றல்களோடு இணைந்து செயலாற்றுவோம் என்றார்.
இந்த மாநாட்டில் முனைவர் தமிழப்பன், புலவர் பாவிசைக்கோ, இந்திய மீனவர் இயக்கத்தின் தலைவர் தயாளன், தமிழர் தேசிய இயக்கத்தின் பொன்னிறைவன், மள்ளர் களத்தின் தலைவர் செந்தில் மள்ளர், தமிழர் சேனையின் தலைவர் நகைமுகன் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினர்.












Click it and Unblock the Notifications