காஷ்மீரில் அமைதி திரும்புமா?

Subscribe to Oneindia Tamil

Geelani
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பொது மக்கள் போராட்டத்தை தூண்டிவிட்டவர்களில் முக்கியமானவரான ஹூரியத் கூட்டமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானி, அமைதியைக் கடைபிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹூரியத் அமைப்பின் முக்கிய உறுப்பு கட்சியான ஜாமத் இ இஸ்மாயில் அமைப்பின் தலைவரான இவர் கடந்த ஒன்றரை மாதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு தான் விடுவிக்கப்பட்டார். தனி காஷ்மீர் மாநிலம் கோரும் ஹூரியத் அமைப்பின் முக்கியத் தலைவரான இவர், வன்முறையல்லாத போராட்டங்களில் ஈடுபடுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் அங்கு போராட்டங்கள் ஓயும் என்று தெரிகிறது.

அவர் விடுத்துள்ள கோரிக்கையில், அமைதியான வழியில் போராடுங்கள், தீ வைப்பது, கல்வீசி தாக்குவது போன்ற வன்முறை செயல்களைக் கைவிடுங்கள். அமைதியாக ஊர்வலம் செல்லுங்கள். போலீஸார் தடுத்தால் அந்த இடத்திலேயே அமர்ந்து போராடுங்கள். ஆனால் வன்முறை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

காஷ்மீரை தனி மாநிலமாக்கக் கோரி தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒரு பக்கம் தூண்டிவிட்டு உதவி செய்து வன்முறைத் தாக்குதல்களை நடத்துகிறது. அதே நேரத்தில் தீவிரவாதம் அல்லாத ஹூரியத் போன்ற அமைப்புகள் அரசியல்ரீதியில் தனி மாநிலத்தை அடைய முயல்கின்றன. இந்த அமைப்புகளுக்கும் பாகி்ஸ்தான் பல வகைகளிலும் உதவி வருகிறது.

இந் நிலையில் தீவிரவாதத் தாக்குதல்களை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதால், ஹூரியத் போன்ற அமைப்புகள் மூலமாக காஷ்மீரில் மக்களையே நேரடியாகத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்த வைக்கும் வேலைகளை பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ செய்து வருகிறது.

ஹூரியத்தின் அழைப்பை ஏற்று இப்போது மக்களே வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதில் பெண்கள், குழந்தைகளும் பெருமளவி்ல் ஈடுபடுவதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய பாதுகாப்புப் படைகள் திணறி வருகின்றன.

இந் நிலையில் பாகிஸ்தானின் இந்த புதிய திட்டத்தை உணர்ந்துள்ள மத்திய அரசு, முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு முழு ஆதரவைத் தந்து வருகிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த அவர் தவறிவிட்ட நிலையிலும், அவரை விட்டால் இப்போதைக்கு வேறு வழி இல்லாததால் அவரை மத்திய அரசு ஆதரித்து, வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறது.

இந் நிலையில் மத்திய அரசின் யோசனைப்படி ஹூரியத் தலைவர் கிலானியை விடுதலை செய்த ஒமரை அவருடன் பேச்சும் நடத்தினார். இதையடுத்தே வன்முறையல்லாத போராட்டங்களில் ஈடுபடுமாறு மக்களுக்கு கிலானி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் மக்களின் குரலை இந்தியா கேட்க மறுப்பதாகவும் கிலானி குற்றம் சாட்டியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில்,

முதலில் காஷ்மீரில் இருந்து ராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும். அடு்த்ததாக 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா ஒப்புக் கொண்டபடி காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருக்க விரும்புகிறார்களா அல்லது சுதந்திர நாடாக இருக்க விரும்புகிறார்களா என்ற வாக்கெடுப்பை இந்தியா நடத்த வேண்டும்.

இந்த சுய நிர்ணய உரிமையை காஷ்மீர் மக்கள் 62 ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். ஆனால், அதை காதில் வாங்க இந்தியா மறுக்கிறது. ராணுவத்தையும் துப்பாக்கியையும் கொண்டு மக்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கிறது. வாக்கெடுப்பில் மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை அனைத்துத் தரப்பினரும் ஏற்கலாம்.

இதற்கு இந்தியா ஒப்புக் கொண்டால் பாகிஸ்தானையும் அவர்கள் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து படைகளை விலக்கச் சொல்வோம்.

காஷ்மீருக்கு வளர்ச்சித் திட்டங்களைத் தருவதாக சோனியா சொல்கிறார். நாங்கள் உங்களிடம் வேலைவாய்ப்புகளையோ, ரோடுகளையோ, பாலங்களையோ கேட்கவில்லை. நாங்கள் கேட்பது எங்களது சுதந்திரத்தை என்றார்.

62 வருடத்துக்கு முந்தைய ஒரு ஒப்பந்தத்தை இப்போது வலியுறுத்துவது சரியா என்று கேட்டதற்கு, சுதந்திரத்துக்காக இங்கிலாந்திடம் இந்தியா 100 வருடம் போராடியதை மறந்து விடாதீர்கள். ஆண்டுகள் கடந்துவிட்டதால் உரிமைகளை விட்டுவிட முடியுமா?.

அதே நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகியவற்றுக்கு மிக அருகில் உள்ள காஷ்மீர், தனி நாடாக விளங்க வேண்டுமென்றால் இந்த 4 நாடுகளின் ஒத்துழைப்பும் உதவியும் மிக மிக அவசியம். காஷ்மீரை அமெரிக்கா தனது காலனியாக்கிவிடும் என்ற பயம் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் உண்டு. இதனால் இன்த 4 நாடுகளின் ஆதரவு இல்லாவிட்டால் காஷ்மீர் ஒரு சுதந்திரமான நாடாக விளங்குவது சாத்தியமே இல்லை.

எங்களிடம் ஆயுதம் இல்லை. ஆனால், இந்தியப் படைகள் துப்பாக்கிகளால் மக்களை சுடுகிறார்கள். இதனால் தான் மக்கள் கல்லெறிகிறார்கள். அதை வன்முறை என்கிறது அரசு என்றார்.

இந் நிலையில் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் கூட்டுவார் என்று தெரிகிறது.

வன்முறை தீர்வல்ல-ப.சிதம்பரம்:

இதற்கிடையே காஷ்மீர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் கலவரத்தில் 39 உயிர்கள் பலியாகியிருப்பது கவலையளிக்கிறது.

காஷ்மீரில் அமைதி திரும்புவதற்காக மாநில அரசு அரசியல்ரீதியிலும் நிர்வாக ரிதீயிலும் பல்வேறு திட்டங்களை பரிசீலித்து வருகிறது. வளர்ச்சி திட்டங்களை முடுக்கி விடுவதோடு காஷ்மீர் மக்களுக்கு சம உரிமையும் நீதியும் காக்கப்படும். காஷ்மீர் மக்களது பிரச்சனை தனது மக்களின் பிரச்சனை என்பதை அரசு நன்கே உணர்ந்துள்ளது.

ஆனால் வன்முறை போராட்டக்களில் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும். வன்முறை செயல்களும் பொதுச் சொத்துகளை அழிப்பதும் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாகாது.

சில பிரிவினைவாதிகள் ஆயுதங்களுடன் அப்பாவி மக்களுடன் கலந்து பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டுள்ளனர். தற்பாதுகாப்பாக படையினர் திருப்பிச் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும்போது நிதானமாகவும் கட்டுப்பாடுடனும் செயல்படுமாறு படையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இருந்த பாசல் உல் ஹக் குரேஷி கொல்லப்பட்டதையடுத்து பேச்சுவார்த்தைகான நடவடிக்கைகள் முடங்கிப் போயின.

கலவரத்தில் பல உயிர்கள் பலியாகி இருப்பது குறித்து மத்திய அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பலர் இறந்துள்ளனர். போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகள் பாதுகாப்பை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரிவினைவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் இளைஞர்கள் பாதை மாறி செல்லும் ஆபத்து உள்ளது என்றார்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+