திமுக-காங் கூட்டணி 'வலி': விரைவில் நிவாரணம்-தங்கபாலு

ஈரோட்டில் நடந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸின் தயவில்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை திமுக மறந்துவிடக்கூடாது. தமிழக அமைச்சரவையில் ஒரு காங்கிரசார் கூட அமைச்சர் பதவி இல்லை. ஆனால் மத்தியில் மட்டும் 5 திமுக அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
மத்திய அரசின் திட்டத்துக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டம் என்று பெயர் சூட்டியுள்ளார். இது என்ன நியாயம் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் திட்டத்துக்கும் மாநில அரசே செயல்படுத்தும் திட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் இளங்கோவன் பேசுகிறார். அவரது பேச்சு கூட்டணியை வலுப்படுத்தும் செயல் அல்ல, வலி தரும் செயல் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த தங்கபாலு அளித்த பேட்டி:
கேள்வி: திமுக பற்றி இளங்கோவன் விமர்சனம் செய்திருக்கிறாரே?
பதில்: காங்கிரஸ்- திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. வலிமையானது. யாராலும் பலவீனப்படுத்த முடியாது. இந்த கூட்டணியின் வலிமைக்கு கவசமாகவும், வலிக்கு நிவாரணமாகவும் இருப்போம்.
கூட்டணி தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது. கட்சியின் பலம், பலவீனங்கள் குறித்து வெளி மேடைகளில் பேசக்கூடாது என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். எல்லோரும் அவரவர்களுக்குரிய எல்லை தாண்டி பேசக்கூடாது. சோனியா எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக யாரும் நடக்க முடியாது.
கேள்வி: இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: பொறுத்திருந்து பாருங்கள்.
கேள்வி: அதிமுக பொதுச் செயலாளரை சிறுபான்மையினர் சமூக கட்சியினர் சந்தித்து பேசியுள்ளார்களே. இது உங்கள் கூட்டணிக்கு பலவீனமாக அமையுமா?
பதில்: மத்திய அரசு மூலமும், மாநில அரசு மூலமும் சிறுபான்மையினர் நிறைய சலுகைகள் பெற்றுள்ளார்கள். இதை அவர்களே அறிவார்கள். எனவே மாயையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றார்.


Click it and Unblock the Notifications
