சிபிஎம் வேகமாக கரைகிறது-கருணாநிதியை சந்தித்த பின் கோவிந்தசாமி பேட்டி
சென்னை: தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேகமாக கரைந்து கொண்டிருக்கிறது. தற்கால அரசியலுக்கேற்ற முடிவுகளை அக்கட்சி எடுக்காததே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ கோவிந்தசாமி.
நேற்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேருவது குறித்து ஆலோசனை நடத்தினார் கோவிந்தசாமி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
திருப்பூர் தொகுதிக்கு பல்வேறு பணிகளை நிறைவேற்றித் தந்தமைக்காக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொகுதி மக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதைக் காரணமாக வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்.
பாராட்டு விழாவின் போது, திருப்பூர் தொகுதிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மேம்பாலங்கள் என சுமார் 800 கோடிக்கும் அதிகமான திட்டங்களை அறிவித்துள்ளார்.
முதல்வரின் உத்தரவுப்படி பல்வேறு திட்டங்களை துணை முதல்வர் அறிவித்தார். இதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன்.
திமுகவில் இணைவது குறித்து, முதல்வருடன் ஆலோசனை நடத்தினேன். முதல்வரும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதை எனது ஆதரவாளர்களுடன் தெரிவித்து ஆலோசித்து இறுதி முடிவை அறிவிப்பேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது. தற்கால அரசியல் சூழலுக்கு ஏற்ப அதனுடயை முடிவுகள் இல்லை. இந்த நிலையில், மீண்டும் அதே திசையில் செல்ல முடிவெடுத்து இருப்பதை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அகில இந்திய அளவிலும் கட்சிக்கு சரிவு ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது. திமுகவில் நான் சேருவது குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவெடுப்பேன் என்றார் கோவிந்தசாமி.
ஒரு வேளை திமுகவில் இணைந்தால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் கட்சி மாறி பகுஜன் சமாஜ் கட்சியில் தலைவராக செயல்பட்டு சமீபத்தி்ல் அங்கிருந்தும் நீக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தும் தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் செல்வப் பெருந்தகை போல எம்.எல்.ஏ. பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications